முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடாத்திய குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன்; 129 பேர் காயமடைந்திருந்தனர்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர் ஒரு வார நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை 08.08.2016 அன்று Frankfurt நகரில் ஆரம்பித்துள்ளனர். இக் கவனயீர்ப்பு நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் குறியீடாக சடலங்கள் உள்ளடக்கிய கறுப்பு நிற பொதிகள் பார்வைக்கு வைக்கப்பட்டதோடு , தமிழ் இளையோர்கள் அமைப்பினர் யேர்மன் மற்றும் ஆங்கிலத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து ,ஈழத்தமிழர்கள் மீது இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பு சார்ந்தும் எடுத்துரைத்தனர்.
இவ்வாறான கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்ந்து ஏனைய நகரங்களிலும் (Essen, Berlin, Stuttgart, Düsseldorf) நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.மேற்படி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொண்டு படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலைகளின் ஆத்மசாத்திக்காகவும் பிரார்த்திக்கும் வண்ணம் அழைக்கின்றோம்.