பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், 67, பிரிட்டன் தலைநகர் லண்டனில், தன் குடும்பத்தினர் பெயரில், சொத்து வாங்கி குவித்ததாக, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் சங்கம், 2016ல் தகவல் வெளியிட்டது.
இதையடுத்து, நவாசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள், அந்த நாட்டு உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தன.
இதை விசாரித்த, உயர்நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பதவியை தகுதி நீக்கம் செய்து, நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது.
நவாஸ், ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து, நவாசின், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, அவரது சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப்பை, 65, புதிய பிரதமராக தேர்வு செய்தது.
ஷாபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக பதவியேற்கும் முன், இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யாக வேண்டும்.
அதுவரை இடைக்கால பிரதமராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சருமான, சாஹித் கான் அப்பாஸி, இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அப்பாசி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல், இம்ரான் கான் மற்றும் முன்னாள் அதிபர் சர்தாரி கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட எதிர்கட்சிகள் சார்பில் 5 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பிரதமரை தேர்வு செய்வதற்காக இன்று பாராளுமன்றம் கூடியது. அப்போது, பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
342 உறுப்பினர்கள் கொண்ட அவையில், மெஜாரிட்டி பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. வாக்கெடுப்பில், ஆளுங்கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட அப்பாஸி 221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் நாட்டின் 18-வது பிரதமராக பதவியேற்க உள்ளார்.
ஷபாஸ் ஷெரீப் எம்.பி.யாக தேர்வு செய்யப்படும் வரை, இடைக்கால பிரதமராக அப்பாஸி செயல்படுவார்.