“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமாகும்போது, பொலிஸார் மீதுதான் முதலில் தாக்குதல் நடத்தினார்கள். வடக்கில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே. போகப் போக இன்னும் நடக்கும்” இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் நேற்றுக் கலந்து கொண்டு கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அலுவலர்கள் மீது நேற்று முன்தினம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அந்தச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகும்போது ஆரம்பத்தில் இவ்வாறுதான் நடந்தது. அவர்கள் ஆரம்பத்தில் பொலிஸார் மீதுதான் தாக்குதல் நடத்தினார்கள்.
இப்போதும் அப்படித்தான் நடக்கின்றது. போகப் போக இன்னும் நடக்கும். இந்த அரசு இவற்றை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்காகவுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் – என்றார்.