பம்பலப்பிட்டி பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் 26 கோடி ரூபா பெறுமதியான காணியை போலி காணி உறுதிப் பத்திரம் ஊடாக 5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற திட்டமிட்ட கும்பல் ஒ ஒன்றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அந்த திட்டமிட்ட கும்பலிடமிருந்து மேலும் நூற்றுக் கணக்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய மோசடி நடவடிக்கைகள் ஏதும் இந்த கும்பலால் அந்த ஆவணங்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் கட்டுப்பாட்டில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்னவின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பம்பலபிட்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான இராமநாதன் கமலநாதன் என்பவர் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் கடந்தவாரம் முறைப்பாடு ஒன்றினைச் செய்துள்ளார். தனது காணியை தனக்கு தெரியாமல் போலி ஆவணம் ஊடாக விர்பனைச் செய்ய முயற்சிகள் நடப்பதாக அவர் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அஞ்ஜலோ பெரேரா, உப பொலிஸ் பரிசோதகர்களான கஸ்தூரி கங்கா, நிஷாந்த, சந்திரசிறி, பொலிஸ் கான்ஸ்டபிள்களான சிசிர (88680), ருவன் (79162) உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் விசேட விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
குறித்த காணியை போலி உறுதி ஊடாக விற்பனை செய்யும் முயற்சிகள் இடம்பெறுவதை வெளிப்படுத்தியுள்ள பொலிஸார், விற்பனை தொடர்பில் ஆரம்ப கட்ட பணப் பறிமாற்றல் பொரலஸ்கமுவ பகுதியில் ஹோட்டல் ஒன்றில் நடப்பதை அறிந்து அங்கு சென்ற பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்தனர்.
இந்த விற்பனை நடவடிக்கையில் பணம் பறிமாற்றல்களுக்கு வந்திருந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ஹசனும் அந்த இருவரில் அடங்கியிருந்த நிலையில் அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது ஹசனின் காரில் இருந்து நூற்றுக்கணக்கான ஆவணங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர். அட்டோனி பத்திரங்கள், காணி உறுதிப்பத்திரங்கள்;, மற்றும் ஏராளமான ஆவணங்கள் அதில் இருந்துள்ளன. இந்த ஆவணங்கள் உன்மையானதா போலியானதா என்பதைக் கண்டறிய விசேட விசாரணைகள் தற்போதும் தொடர்கின்றன.
முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் இந்த போலி ஆவணங்களை காணி பதிவுத் திணைக்களத்தில் பதிவிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக நம்பப்படும் சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டனர். இதனையடுத்து றிஸ்மின் எனும் சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து செய்யப்பட்ட மேலதிக விசாரணைகளில் கட்டுகஸ்தோட்டை வஜிர என்பவர் ஊடாகவே இந்த போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளமையை பொலிஸார் கண்டறிந்தனர்.
கட்டுகஸ்தோட்டை வஜிர மீது கண் வைத்த பொலிஸார், போலி காணி உறுதி தொடர்பிலும் பிரத்தியேக விசாரணையை நடாத்தினர். இதன் போது இராமநாதன் கமலநாதன் எனும் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான காணி, வேறு இருவருக்கும் விற்கப்பட்டு, அவ்விருவர் ஊடாக மற்றொருவருக்கு விற்பனைச் செய்யப்படுவதைப் போல் ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்தை பொலிஸார் அவதானித்தனர்.
வவுனியா, யாழ் பகுதியைச் சேர்ந்த குறித்த இருவரையும் முதலில் கைது செய்த பொலிஸார் அவர்களை ஏனைய சந்தேக நபரையும் கைது செய்தனர்.
இதன் போது போலி உறுதிகளை அச்சிட பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், ஸ்கேனர், முத்திரைகள், காணி உறுதிகள் அச்சிடப்பயன்படுத்தப்படும் தாள்கள் உள்ளிட்டவற்ரையும் பொலிஸார் கைப்பற்றினர்.
மொத்தமாக இதுவரை 8 சந்தேக நபர்கள் கொழும்பு மோசடி தடுத்துப் பிரிவினரால் கைது செய்யப்ப்ட்டுள்ள நிலையில் அவர்களில் ஐவர் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.