சீனாவில் பெண் ராணுவ படையை பலப்படுத்த கடல் மற்றும் மலைகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொண்டு எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது.
கம்யூனிச நாடான சீனாவில் மக்கள் விடுதலைப்படை என்ற பெயரில் ராணுவம் உள்ளது. உலகில் அதிக வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த 2-வது ராணுவமாக அது விளங்குகிறது.
இந்த ராணுவத்தில் அனைத்து பெண்கள் சிறப்பு படை பிரிவும் உள்ளது. இது கடந்த 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் பணிபுரியும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சக்தி படைத்தவர்களாக திகழ்கின்றனர்.
முன்பு அலங்கார அணி வகுப்புக்கு மட்டுமே இவர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது இவர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்களைப் போன்று கைத் துப்பாக்கி, ரைபிள் சுடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் எந்திர துப்பாக்கிகளை கையாளும் விதமும் கற்றுத்தரப்படுகிறது.
தற்போது இவர்களுக்கு கடும் குளிர் தாக்கும் மலைகளிலும், ஆழ் கடலிலும் போர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொண்டு எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது.