நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு

247 0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது 2 மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீது 4 கிரிமினல் வழக்குகளை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்தது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் பதவி இழந்தார்.

வருமானத்துக்கு அதிகமாக இவரது மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்ததாகவும், தொழில் நிறுவனங்கள் நடத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு பிரிவான தேசிய பொறுப்பு குழு (என்.ஏ.பி.) முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது 2 மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்துள்ளது.

தேசிய பொறுப்புக்குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. அதில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் இறுதி முடிவு எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதில் நவாஸ் ஷெரீப், குடும்பத்தினர் மீது இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி கோர்ட்டுகளில் 4 வழக்குகள் தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

Leave a comment