வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. மேலும் தேர்தலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வேட்பாளர் ஒருவர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு மத்தியிலும் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த தேர்தல் முடிவடைந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன.
இதில் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ நேற்று அறிவித்தார். கடந்த 18 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய புரட்சி என தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார்.
இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜான்-உன், சிரிய அதிபர் ஆசாத் ஆகியோருக்கு பிறகு மதுரோ மீது அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.