நீட் தேர்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

332 9

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெற முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு செய்த மேல்முறையீட்டு மனு மீது இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதால் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ, வியப்போ ஏற்படவில்லை. மாறாக, மத்திய, மாநில அரசுகள் செய்த துரோகத்தால் பாதிக்கப்பட்ட மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கு நீதியே கிடைக்காதா? என்ற வேதனை தான் மேலோங்கி நிற்கிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று கூறிய நீதிபதிகள், இவ்வி‌ஷயத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு செய்த துரோகம் குறித்தும் பட்டியலிட்டிருக்கின்றனர்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் நிலையில், அவர்களில் லட்சத்தில் ஒருவர் கூட ஐ.ஐ.டி.க்களில் சேர முடிவதில்லை. கடந்த ஆண்டு வெறும் 7 மாணவர்கள் மட்டும் தான் ஐ.ஐ.டி.களில் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்த புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி, மாநிலப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன் விளைவுதான் இப்போது மருத்துவப் படிப்பில் தமிழ் நாடு மாநிலப் பாடத் திட்ட மாணவர்களால் சேர முடியாத அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் செய்த தவறுகளுக்காக மாணவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என்பதை மத்திய அரசும், நீதிமன்றங்களும் சிந்திக்க வேண்டும். தேசிய அளவிலானப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு தமிழக மாணவர்களின் தரம் உயரவில்லை என்று நீதிமன்றமே கூறும் போதும், அவர்களை கல்வித் தரத்தில் உயர்ந்த பாடத்திட்ட மாணவர்களுடன் ஒன்றாக போட்டியிட வைப்பது எந்த வகையில் நியாயம்?

சமமான தரம் இல்லாத இரு பாடத்திட்ட மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தியதன் மூலம் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு மத்திய அரசும், நீதிமன்றங்களும் பெரும் துரோகம் இழைத்து விட்டன.இப்போதுள்ள நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும். உடனடியாக இதை தமிழக அரசு செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு பினாமி எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment