இலங்கை இந்திய ஒப்பந்தமும், இன்றைய அரசியல் தீர்வும் – செல்வரட்னம் சிறிதரன்!

576 10

இலங்கையில் தமிழர்கள் மீது ஓர் இன அழிப்பு நடவடிக்கையாக 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னணியில் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வுக்கான வழி திறந்திருந்தது.

அதன் பின்னர், முப்பது ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஒரு தடவை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் அரசியல் தீர்வுக்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது. அரசியல் ரீதியான அந்த வாய்ப்பு குறித்து தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை நம்பிக்கை ஊட்டிவருகின்றது. இது, அரசியல் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, 2009 ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில் இன அழிப்பை முனைப்பாகக் கொண்டு நடத்தப்பட்ட மோசமானதோர் இராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உருவாகியுள்ள அரசியல் நிலைமையாகும்.

தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தார்கள். ஆனால் அந்தத் தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு நடைமுறையில் சாத்தியமான அரசியல் ரீதியாக சுயமாக வடிவமைக்கப்பட்ட செயற் திட்டங்களோ அல்லது இராஜதந்திர வழிமுறைகள் சார்ந்த அணுகுமுறைகளோ கூட்டணித் தலைவர்கள் வசம் இருக்கவில்லை.

உணர்ச்சிகரமான ஒரு சூழலில் தமிழ் மக்களை எழுச்சிபெறச் செய்து வாக்களிப்பதற்கு ஊக்குவிப்பதற்கான தேர்தல் நலன்சார்ந்த ஒரு திட்டமாகவே தனிநாட்டு கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது எனலாம்.

ஆறாவது திருத்தச் சட்டம்

ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணியை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறத்தக்க வகையில் தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தார்கள். தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இது தமிழ் மக்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைத்திருந்த உச்சகட்ட அந்தஸ்து நிலைமையாகும். அத்தகையதோர் அரசியல் அந்தஸ்தைப் பெற்றிருந்த போதிலும், உள்நாட்டிலோ அல்லது சர்வதேசத்தின் உதவியுடனோ தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியினால் முடியாமல் போயிருந்தது.

தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வெற்றிபெற்றிருந்த போதிலும், அது குறித்து  செயற்பட முடியாத வகையில், இலங்கை அரசியலமைப்பில் 6 ஆவது திருத்தச் சட்டம் அப்போதைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருந்தது. நாட்டுப் பிரிவினைக்கு எதிரான இந்த திருத்தச் சட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டை சட்டரீதியான அதிகாரத்துடன் வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பை ஆதரித்துப் பாதுகாப்பதுடன், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்கு, ஆதரவளிக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியுதவி அளிக்கவோ, அதற்கான பிரசாரத்தை முன்னெடுக்கவோ மாட்டேன் என உறுதியளித்து சத்தியம் செய்து கையெழுத்திட வேண்டும் என்று 6 ஆவது திருத்தச் சட்டம் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள், அமைச்சர்கள், அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளி;ட்ட அரச நிறுவனங்களில் பணயாற்றும் சகலரும் இந்த சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது. அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்யாதவர்கள் அந்தந்தப் பதவிகள் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அந்தச் சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது.

ஆரம்ப கட்ட ஆயுதப் போராட்டத்தால் எற்பட்ட ஆத்திர நிலைமை

வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக்கூட்டணி 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்றிருந்தது. அதே வேளை, 70களின் ஆரம்பத்திலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டச் செயற்பாடுகளை இலைமறை காயாகத் தொடங்கியிருந்தார்கள். இதனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்களும் வன்முறைகளும் இடம்பெறத் தொடங்கியிருந்தன. தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்றிருந்த ஜே.ஆர்.ஜயவர்தன தனக்கு எதிரான அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தையடுத்து, வன்முறைகள் வெடித்திருந்தன.

தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கும் தோல்வியைத் தழுவியிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கட்சி ஆதரவாளர்கள் மட்டத்தில் ஆரம்பமாகிய வன்முறைகள், தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்காகத் தமிழ் இளைஞர்கள் சிங்கள பொலிசார் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் கிளப்பப்பட்ட வதந்திகள் சிங்களவர்கள் தமிழர்களைத் தேடித் தேடி தாக்கும் நிலைமையை உருவாக்கி கலவரத்தைத் தூண்டியிருந்தது.

தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராகியிருந்த அமிர்தலிங்கத்திற்கும், தனிநாட்டு போராட்டத்தைக் கையில் எடுத்து வன்முறைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கருதிய ஜயவர்தன  தமிழ் இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபட்டால், சிங்களவர்களும் பதிலடியாக வன்முறைகளில் ஈடுபடுவார்கள். எனவே போர் என்றால் போர் என்று சிங்களவர்கள் செயற்படுவார்கள். இதனை நான் கூறவில்லை. சிங்கள மக்கள் கூறுகின்றார்கள் என ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

பொதுத்தேர்தலைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கணிப்பிடப்பட்டிருந்தது. சிங்களமே ஆட்சி மொழி என்று சட்டம் கொண்டு வரப்பட்டதையடுத்து 1958 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளையடுத்து 19 வருடங்களின் பின்னர், மீண்டும் 1977 ஆம் ஆண்டு ஓர் இனக்குரோதம் மிக்க வன்முறைகள் இடம்பெற்றன.

கறுப்பு ஜுலை இனக்கலவரம்

அதேவேளை, ஆயுதக் குழுக்களை அடக்கவும் வேண்டும், தேர்தலில் வெற்றிபெற்று அரசியல் ரீதியாகப் பலமுள்ள ஒரு சக்தியாகத் தலைதூக்கியுள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான சந்தர்ப்பத்திற்காக ஜயவர்தன காத்திருந்தார்.

அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 1983 ஆம் ஆண்டு, ஜுலை 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்தியில் இராணுவத் தொடரணி ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து வன்முறைகள் வெடித்தன.

இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இடத்தைச் சூழ்ந்த பகுதிகளில் இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தினார்கள். இதனால் அப்பாவிகளான பொதுமக்கள் உயிரிழப்புக்களும், அவர்களின் வீடுகள் உடைமைகள் என்பவற்றிற்கு, பெரும் சேதங்களும் ஏற்பட்டன.

அதேவேளை, கொழும்பில் பொறல்லை மயானப்பகுதியில் மூண்ட கலவரங்கள், தமிழர்களைத் தேடித் தேடித் தாக்கும் வகையில் இனக்கலவரமாக – இன அழிப்பு நடவடிக்கையாக தீவிரமடைந்தன.  இந்தக் கலவரத்தின்போது நாலாயிரம் பேர் வரையில் தமிழர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. தமிழ் மக்களின் பெறுமதி மிக்க வீடுகள் உடைமைகளுடன் தீயிடப்பட்டன. பல இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழ் வர்த்தகர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வர்த்தக உடைமைகள் அழித்து நாசமாக்கப்பட்டன. மொத்தத்தில் நாட்டின் வர்த்தகத் துறையில் முன்னணியில் திகழ்ந்த தமிழர்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்ட வகையில் மீண்டும் பழைய நிலைமைக்கு எழுச்சி பெற முடியாத அளவில் அழிக்கப்பட்டன.

தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராகியிருந்த அமிர்தலிங்கத்துக்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையில் அரசியல் ரீதியான நெருக்கமான ஒரு தொடர்பு நிலவியது. அதேவேளை, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு மிகவும் வேண்டப்பட்;டவராக ஜே.ஆர்.ஜயவர்தன திகழ்ந்தார். இந்தப் பின்னணியில் 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையடுத்து இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்திய அரசு அக்கறை செலுத்தத் தொடங்கியிருந்தது.

இவ்வாறு அக்கறை கொள்வதற்கு தெற்காசிய பிராந்தியத்தின் அரசியல் மற்றும் இராணுவ பொருளாதார நிலைமைகளும் தூண்டுகோலாக அமைந்திருந்தன என்பது அரசியல் வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பீடாகும்.

அதன் விளைவாகவே அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுதமேந்தத் தொடங்கியிருந்த தமிழ் இளைஞர்களுக்கு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மறைமுகமாக இந்தியாவில் இராணுவ உதவிகளை வழங்கி, இராணுவ பயிற்சி அளிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

தெற்காசிய பிராந்திய அரசியல் நிலைமை

பங்களாதேஸ் சுதந்திரம் பெற்ற விவகாரத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா முரண்பட்டிருந்த வேளையில், பாகிஸ்தானுக்குச் சொந்தமான போர்விமானங்களை கட்டுநாயக்க விமானதளத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையின் இந்தச் செயற்பாட்டினால், அயல்நாடாகிய இந்தியா கசப்படைந்திருந்தது. அதேவேளை, அமெரிக்காவும், சீனாவும் தெற்காசியப் பிராந்தியத்தில் கால் ஊன்றுவதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தன. பங்களாதேஸ் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உதவுவதற்கு அந்த நாடுகள் விரும்பியிருந்த போதிலும், பங்களாதேசுக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கியிருந்ததனால், இந்தியாவுடன் நேரடியாக முரண்படுவதற்கு அந்த நாடுகள் விரும்பியிருக்கவில்லை.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் 1983 ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தின்போது, தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். கடல் கடந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்குச் சென்றபோதிலும், தமிழ் மக்கள் விடயத்தில் ஜயவர்தன மென்போக்கிற்குப் பதிலாக பிடிவாதமாக வன்போக்கிலேயே நாட்டம் கொண்டிருந்தார். வரைமுறையற்ற வகையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்ற போதிலும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கு ஜயவர்தன அப்போது தயாராக இருக்கவில்லை. போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு நொந்து நூலாகிப் போயிருந்த தமிழ் மக்களை நோக்கி அவர் கர்ச்சனை செய்திருந்தார்.

தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து அரசியலில் முனைப்பு பெற்றிருந்த அமிர்தலிங்கம் மறைமுகமாக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு உதவி புரிகின்றார் என்று ஜயவர்தன திடமாக நம்பினார். அந்த நிலையில் தமிழர் தரப்பை போராட்ட வழியில் இருந்து அடக்கி வழிக்குக் கொண்டு வருவதற்கு முழு அளவிலானதோர் இராணுவ நடவடிக்கையை ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் யாழ்; வடமராச்சி பகுதியில் 1987 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தார்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்குவதற்காக முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட ஜயவர்தன அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராணுவ உதவியை நம்பியிருந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இலங்கையில் கால் பதிக்கும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது. அத்தகைய ஒரு நிலைமை உருவாகுமானால், இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று இந்தியா அச்சமடைந்திருந்தது.

இத்தகைய பிராந்திய ரீதியிலான பாதுகாப்பு அச்சத்தின் காரணமாகவே, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தமே இலங்கை இந்திய ஒப்பந்தமாக, முப்பது வருடங்களுக்கு முன்னர், 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் கைச்சாத்திட்டனர்.

முக்கிய முன் நிபந்தனைகள்

இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்த இந்தியா ஆயுதமேந்திப் போராடிய தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களை ஜனநாயக வழியில் திருப்புவதாக இலங்கை அரசாங்கத்திற்கு உறுதியளித்தது. அதேவேளை, இலங்கைக்கு முக்கியமான பல நிபந்தனைகளையும் இந்தியா விதித்திருந்தது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கத்தைய நாடுகளின் இராணுவ மற்றும் இராணுவ புலனாய்வாளர்களை இலங்கையில் இருந்து அகற்ற வேண்டும்.

இலங்கை தனது அயலுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை மறு பரிசீலனை செய்து, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், தென்னமெரிக்கா போன்ற நாடுகளுடான ஈடுபாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரானதும், அந்தப் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அந்நிய சக்திகள் இலங்கையின் துறைமுகங்களையும், விமான தளங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று இலங்கை உத்தரவாதமளிக்க வேண்டும்.

அத்துடன் 1985 ஆம் ஆண்டு இலங்கை உத்தரவாதமளித்தவாறு, திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் கிணறு பண்ணைகளை இந்தியா பராமரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதேவேளை, வொய்ஸ் ஒவ் அமெரிக்கா போன்ற வானொலி ஒலிபரப்பு நிலையங்களை மேற்கத்தைய நாடுகள் தமது இராணுவ தேவைகளுக்காகப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முன் நிபந்தனைகளை இந்;தியா விதித்திருந்தது.

இந்த நிபந்தனைகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்புலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது. இந்த நிபந்தனைகள் இலங்கையைப் பொருத்தமட்டில் அதிகசபட்சமாக இருந்த போதிலும், இராஜதந்திர ரீதியில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா கொண்டிருந்த நாட்டத்தை இலங்கை நன்கு புரிந்து கொண்டிருந்தது. அதேவேளை, பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஸைப் பிரித்து சுதந்திர நாடாக்குவதற்கு இராணுவ உத்தியைப் பயன்படுத்தியிருந்த இந்தியாவின் போக்கையும் ஜனவர்தன மிகவும் அவதானத்தில் கொண்டிருந்தார்.

இத்தகையதோர் அணுகுமுறையின் பின்னணியிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டமும் இலங்கையினால் கொண்டு வரப்பட்டது.

அரசியல் தீர்வின் அடிப்படையிலான ஒப்பந்த நிபந்தனைகள்

இலங்கையின் ஒருமைத் தன்மை, இறைமை, ஐக்கியம் என்பவற்றை பேணுவதை முக்கிய நோக்கமாக இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டிருந்தது.

அதேவேளை, இலங்கை பல்லின, பல மொழி பேசுகின்றவர்களாகிய சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் ஆகிய பல இனங்கள் வசிக்கின்ற நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒவ்வோர் இனத்தவரும் தமது மொழி கலாசார அடையாளங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற வகையில் பிராந்தியங்களை கவனமாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழ்ப்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமாகவும், அங்கு அவர்கள் வரலாற்று காலம் தொட்டு ஏனைய இனங்களுடன் வாழ்ந்து வந்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடு என்பதை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் அந்த மக்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் சமத உரிமைகளுடனும், பாதுகுhப்புடனும், ஐக்கியமாக தமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்ட வகையில் வாழ வழி செய்யப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் மாகாண சபை நிர்வாக முறை அமைய வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. வடக்கும் கிழக்கும் இணைந்ததாக ஒரு மாகாண சபையும் ஏனைய மாகாணங்களுக்கு தனித்தனியே மாகாண சபைகளும் உருவாக்கப்பட வேண்டும். தற்காலிகமாக இணைக்கப்படுகின்ற வடக்கும் கிழக்கும் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்க வேண்டுமா என்பது சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் நிபந்தனையாகும்.

அதேவேளை ஆயுத குழுக்கள் தமது ஆயுதங்களைக் கையளித்து, ஜனநாயக நீரோட்டத்தில் இணைய வேண்டும். இராணுவம் தமது முகாம்களில் முடக்கப்பட வேண்டும். பாதுகாப்பு விடயங்களைக் கவனிப்பதற்காக வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிப்படை நிலைகொண்டு கடமையில் ஈடுபட்டிருக்கும் என்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த வகையிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாண நிர்வாக முறைமை இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வாகக் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், ஜயவர்தன அரசாங்கமும்சரி, அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்களும் சரி அந்த ஒப்பந்தத்தின்படி, காரியங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. மாறாக ஒப்பந்தத்தின்படி இணைக்கப்படடிருந்த வடக்கும் கிழக்கும் இரண்டு வௌ;வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்போதைய நிலைமைகள்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பல்லின, பல மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்ற நாடாக ஒப்புக்கொள்ளப்பட்டு, அவர்கள் சம உரிமைகளுடன் ஐக்கியமாக வாழவேண்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த போதிலும், இப்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்று ஏற்றுக்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பௌத்த மதம் முன்னுரிமை பெற்றுள்ள அதேவேளை ஏனைய மதங்கள் சம உரிமை உடையவையாக இருக்கும் என்ற மயக்கம் தருகின்ற நிலைப்பாடு குறித்து பேசப்படுகின்றது.

இலங்கை ஒப்பந்தத்தை முதற்படியாகக் கொண்டு, அதிலும் பார்க்க அதிக உரிமைகளும் அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்ட ஓர் அரசியல் தீர்வை நோக்கி முன்னேறுவது குறித்து சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியதே இன்றைய தேவையாகும்.

பிராந்திய பாதுகாப்பு, அரசியல் இராணுவ பொருளாதார ரீதியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இலங்கையின் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதேவேளை. மேற்கத்தைய நாடுகளும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் கால் பதிக்கத்தக்க நிலைமைகளை உருவாக்க வல்ல இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதும் அவசியமாகும். இத்தகைய நிலைமையில், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆக்கபூர்வமான முறையில் பங்களிப்பு செய்து ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன் வர வேண்டும்.

ஏற்கனவே இதுவிடயத்தில் அக்கறை கொண்டு பங்களிப்பு செய்த இந்தியா விட்டகுறை தொட்ட குறையாகத் தொடர்கின்ற இனப்பிரச்சினை விவகாரத்தில் குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Leave a comment