எனது ஆசீர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – சிறிசேன

12487 23

பாராளுமன்ற தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும், அதற்கு தனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்ற பின்னர் அரசாங்கமும், ஜனாதிபதியும் முடிவடைந்து விடுவார்களென எதிர்க்கட்சி உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை தொடர்பில் நினைவூட்டிய ஜனாதிபதி, 113 ஆசனங்களைப் பெற்றாலும் அரசியலமைப்புக்கமைய எவரும் தனது ஆசீர்வாதம் இன்றி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாதென தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி, தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் போது, வெற்று கோசமிடுவோர் நாட்டில் பல்வேறு குழப்ப நிலையை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (31) முற்பகல் ஹிங்குராக்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்ல விடயங்களில் ஈடுபடுவோருக்காக அன்றி, வெற்று கோசமிடுபவர்களுக்கே இன்று சில ஊடகங்களில் இடம் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் காரணமாக நாட்டில் சிலர், அரசாங்கம் தொடர்பில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் குடும்ப ஆதிக்கத்தை விதைத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய நாட்டின் பயணத்தை மாற்றி, நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்ற வகையில் தனது தலைமையில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் கோசமிட்டுக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

அறிவை மையப்படுத்திய சமூகத்தை நோக்காகக்கொண்டு ஹிங்குராக்கொட கல்வி வலயத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக வடமத்திய மாகாண சபையினால் 45 இலட்ச ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, வலய கல்வி அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அலுவலர்களுடன் கலந்துரையாடியதுடன், இணைய தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் மீகஸ்வௌ, வடிகவௌ, பதோக்வௌ, செனரத்புர, குமுதுபுர, மயிலகஸ்கந்திய பகுதிகளில் வாழும் 3000 வரையான குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 11 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மெதிரிகிரிய, மீகஸ்வௌ, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, முதலாவது நோயாளரையும் ஜனாதிபதி பதிவு செய்து வைத்தார்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண சுகாதார அமைச்சர் எம். ஹேரத் பண்டா, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment