சபரிமலை கோவில் நிலம் யாருக்கு சொந்தம் என்று கோர்ட்டு உத்தரவுபடி அளவிடும் பணி தொடங்கியது. கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்திபெற்ற சுவாமி அய்யப்பன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் பந்தள மகாராஜாவால் கட்டப்பட்டது.
மேலும் சபரிமலை கோவிலுக்கு ஏராளமான நிலங்களையும் பந்தள மகாராஜா எழுதிவைத்தார். அதன்படி காலகாலமாக அந்த சொத்துக்கள் அய்யப்பன் கோவிலுக்கு சொந்தமாக இருந்து வருகிறது.இந்த நிலையில் சபரிமலை கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு அந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து அளவிடும் பணி நடந்தது.
அப்போது தேவசம் போர்டுக்கும் வனத்துறைக்கும் நிலங்களை அளக்கும் போது எல்லை பிரச்சினை, எந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இதைதொடர்ந்து தேவசம் போர்டு சார்பில் கொச்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி இதனை விசாரித்து சபரிமலை கோவில் நிலங்களை அளந்து எல்லை கல் பதிக்க பத்தனம்திட்டை தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
அதைதொடர்ந்து சபரிமலை கோவில் நிலம், வனத்துறை நிலங்களை அளந்து எல்லை கல் பதிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.இதுபற்றி தேவசம் போர்டு தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது தேவசம் போர்டுக்கு சொந்தமான நிலத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டோம். சபரி மலையின் ஐதீகத்தை யாரும் மீறவும் விடமாட்டோம் என்றார்.