நாட்டில் நிலவிவரும் வறட்சி நிலை காரணமாக நாளாந்த மின்சார விநியோகத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக நீர் மின்சார உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இரவு வேளைகளிலேயே அதிகளவிலான மின்சாரம் தேவைப்படுவதாகவும் இதனால் மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 44 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த, 8 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரையில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட பிரதேச சபைகள் மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும் தொடர் வறட்சியால் பெரும்பாலான இடங்களில் கிணறுகளின் நீர் முழுமையாக வற்றியுள்ளது.
இதனால் மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு போதுமான நீரை பெற்றுக்கொள்வதில் பிரதேச சபையும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.