உதயங்க வீரதுங்க தொடர்பில் அறிவித்தல்

410 0

utajaஇலங்கையின் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கவுக்கு நீதிமன்ற அறிவித்தலை கையளிக்க முடியாத நிலை உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

நிதி மோசடி பிரிவால், குறித்த நீதிமன்ற அறிவித்தல், முன்னதாக வீரதுங்கவின் தலப்பிட்டிய வசிப்பிடத்திற்கு அனுப்பபட்ட போதும் அவர் வெகுநாட்களாக அங்கு இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மின்னஞ்சலின் ஊடாக  நீதிமன்ற அறிவித்தலை அனுப்பமுற்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இதனையடுத்து, சர்வதேச காவற்துறை ஊடாக நீதிமன்ற அழைப்பை உதயங்க வீரதுங்கவுக்கு அனுப்புவதற்கு நிதி மோசடி தவிர்ப்பு காவற்துறை பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த போதும் நீதவான் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடாக அதனை அனுப்புமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதனடிப்படையிலேயே, உரிய அறிவித்தலை உதயங்க வீரதுங்கவிற்கு கையளிக்க முடியாதிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.
வீரதுங்கவிற்கு எதிராக மிக் 27 ரக தாக்குதல் வானுர்திகளை கொள்வனவு செய்ததில் நிதி முறைகேடுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், குறித்த மிக் ரக வானுர்திகளின் கொள்வனவு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த ஆவணங்களை கண்டறிவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் நிதி மோசடி தவிர்ப்பு காவற்துறை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.