வசிம் தாஜூடினின் கொலை தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு, கொழும்பு மேலதிக நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தாஜூடினின் பிரேதப் பரிசோதனைகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர கவனயீனமாக செயற்பட்டதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கை வைத்திய சபையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலும் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், இன்னும் கைதுசெய்யப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆனந்த சமரசேகர குறித்து ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் விசாரிக்கப்பட்டதாகவும் அவற்றில் மூன்றில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இலங்கை வைத்திய சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, ஆனந்த சமரசேகரவின் வைத்திய அனுமதியை ஆறு மாதங்களுக்கு இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கை வைத்திய சபையின் அறிக்கையை தற்போது ஆராய்ந்து வருவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆராய்ந்து முடிந்த பின் அது குறித்த தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாஜூடின் மரணித்த தினத்தில் அவரது வாகனத்திற்கு பின்னால் சென்ற வாகனங்களில் இருந்தவர்களது புகைப்படங்களை, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி பரிசோதனை செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இதனுடன் தொடர்புடைய தொலைபேசி அழைப்புக்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் நினைவூட்டினார்.
எதுஎவ்வாறு இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தாமதப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்ட கொழும்பு மேலதிக நீதவான், இதனை விரைவாக மேற்கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய ஆகஸ்ட் 27ம் திகதி இந்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு, அன்றையதினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.