விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள வரும் நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளியொருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பூநகரியை சேர்ந்த நடராஜா கலியுகராஜா (53 வயது) என்பவரே உயிரிழந்தவராவர். குறித்த நபர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி அவருக்கு காச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இருந்த போதிலும் காச்சலின் தீவிர தன்மை காரணமாக அங்கிருந்து 27ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்த மரணம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணையை மேற்கொண்டிருந்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 107 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இவரது மரணமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.