ஜீவசமாதியடைய 18-ந் தேதி முதல் முருகன் ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதில் 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறேன். இதற்கு மேலும் சிறைவாழ்க்கையை தொடரவிரும்பவில்லை. அதனால் சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புகிறேன்.
எனவே வருகிற 18-ந் தேதி முதல் உணவு உண்ணாமல் பட்டினி கிடந்து சிறையிலேயே ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முருகன் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற 18-ந் தேதி முதல் ஜீவசமாதி அடைவதற்காக தற்போது சாப்பிட்டுவரும் ஒருவேளை உணவையும் தவிர்த்து பழங்களை மட்டுமே சாப்பிட இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
முருகன் சாமியாரானதில் இருந்து ஒருநாளைக்கு இருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருகிறார். மேலும் ஜீவசமாதியடைய 18-ந் தேதி முதல் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட அனுமதி கேட்டுள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக முருகன் ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.