எல்லையில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு நடுவே பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா சென்றடைந்தார்.
பிரிக்ஸ் நாடுகளின் இரண்டு நாள் மாநாடு நாளை சீன தலைநகர் பீஜிங்கில் தொடங்குகிறது. பிரிக்ஸ் அமைப்பில் உள்ள சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு பீஜிங் சென்றடைந்தது.
சிக்கிம் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அஜித் தோவலின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாநாட்டின் நடுவே இந்திய சீன அதிகாரிகளுக்கு நடுவே எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எல்லையில் இந்தியா தனது படைகளை திரும்ப பெறாத வரை பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருக்காது என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.