தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.இதன்படி, இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியும் கலந்து கொள்ளவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் ராஜகருண தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் நாடெங்கிலும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் விநியோக சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்களது நலன் கருதி அனைவரும் மீண்டும் சேவைக்கு திரும்ப வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
பிரச்சினைகள் இருப்பில் பொதுவான பேச்சு வார்த்தைகள் மூலம் அவற்றை தீர்த்துக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கனிய எண்ணெய் விநியோக சேவைகள் அத்தியாவசிய தேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு நேற்று நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனிய எண்ணெய் சேவையாளர் இன்றைய தினம் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் பணியில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், எரிபொருள் சேவை அத்தியாவசியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை விநியோக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தொடர்பு கொள்ளவுள்ளது.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்
இதன்படி பிரதான எரிபொருள் விநியோக களஞ்சியசாலைகளான முத்துராஜவலை மற்றும் கொலன்னாவை பகுதிகளுக்கு இராணுவம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, தற்போது போராட்டத்தில் பங்குபற்றாத கனிய எண்ணெய் சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் அடுத்தக்கட்டமாகவே இராணுவம் இந்த பணிகளை நேரடியாக மேற்கொள்ளதிட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கனிய எண்ணைப் பணியாளர்கள், கொலன்னாவை எண்ணெய் கலஞ்சிய சாலைக்கு முன்னால் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கலஞ்சிய சாலையில் இருந்து தாங்கள் பலவந்தமாக இராணுவத்தால் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.