இலங்கையில் 1983ம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை தமிழினப் படுகொலையின் 34ம் ஆண்டு நிறைவையொட்டி கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus நகரில் இன்று (25.07.2017) படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு சுமந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழர்கள் பலர் உயிரோடு கொழுத்தப்பட்டு தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வெலிக்கடைச் சிறைக்குள் இருந்த தமிழ் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். இத்தமிழினப்படுகொலை இன்று வரையும் தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கிறது.
டென்மார்க் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி வைக்கப்பட்டதோடு அது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இக் கண்காட்சியை டெனிஸ் மற்றும் வேற்றின மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.
தமிழர்கள் தமிழீழத்தில் தம் அடையாளங்களுடன் சுதந்திரமாக வாழுகின்ற நிலைமை உருவாகும் வரைக்கும் புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் தொடர் போராட்டங்களை நடாத்தி எம்மினத்திற்கு ஏற்ப்பட்ட அவலங்களை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழர்களின் தாரகமந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவு பெற்றது.