அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாக தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது!

406 0

jail-cell_CI-720x480பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாகவே தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா ஆனந்தராசாவும், அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நேற்று அவர்களை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டிருக்கின்றனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 2012 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்த இராசையா ஆனந்தராசாவை மீண்டும் 2012 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 24 ஆம் திகதி கைதுசெய்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் – 17 ஆம் திகதி வரை விடுதலையை வலியுறுத்தி ஆனந்தராசா,தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்ட நிலையிலேயே அவருக்கு ஊசியொன்று ஏற்பட்டப்பட்டுள்ளது. பின்னர் இறுதியாக கடந்த மாதம் 18 ஆம் திகதி மீண்டும் ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

இராசையா ஆனந்தராசாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலமையை அடுத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய 22 தமிழ் அரசியல் கைதிகளும் தற்போது அச்சமடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்தார்.தமது விடுதலைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டமைப்பிற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.