கறுப்பு ஜூலை: ஆழப் பதிந்துள்ள ஆறா வடுக்கள்!

423 0

து படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்தத் மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், ஈழத் தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான் இதனை மற்ற முடியவில்லை. நினைவுகளின் ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடுவாக இது இருக்கின்றது.

இந்தப் படுகொலைக்கும் வரலாறு இனக் கலவரம் என்றே பெயரிட்டது. அதன் பெயரிலேயே ஜுலை கலவரம் என்று தனி அடையாளப்படுத்தல்களை வழங்கியது. இதனை இனக் கலவரம் என்று வரைவிலக்கணப்படுத்திப் பார்ப்பது பொருத்தமானதா?

 

கலவரம் எனப்படுவது இரு தரப்பினர் மோதிக் கொள்வதையே குறிக்கின்றது. ஓர் இனம் இன்னோர் இனத்தின் மீது காட்டுமிராண்டித்தனங்களை கட்டவிழ்த்து விடுவதையும், அடிவாங்கும் இனம் திருப்பித்தாக்காமல் ஓடுவதையும் இனக்கலவரம் என்று குறிப்பிட முடியுமா? எனவே இதனை இனச் சுத்திகரிப்பு எனக் குறிப்பிடுவதே பொருத்தமாகும்.

ஜுலை படுகொலையை இனச் சுத்திகரிப்பு எனப் பிரகடனம் செய்தவதற்கான போதிய தடயங்களை அது விட்டுச் சென்றிருக்கின்றது. இனச் சுத்திகரிப்பின் பிரதான இலக்கு, அழிக்கப்பட வேண்டிய இனத்தை முற்றாக அழிப்பது. அல்லது பேரழிவுகளை ஏற்படுத்தி, அந்த இனத்தைக் குறித்த பிராந்தியத்திலிருந்து அகற்றிவிடுவது. 1983 ஆம் ஆண்டில் தெற்கில் வாழ்ந்த தமிழர்கள் தம் சொத்துக்களையும், வாழ்வு மரபுகளையும், பொருளாதார தேட்டங்களிலும் மேலாண்மை கொண்டிருந்தனர்.

தமிழின சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் முதலில் செய்த வேலை தமிழர்களின் பொருளாதார மையங்களை சிதைத்தமை ஆகும். கொள்ளையடிப்பு, தீவைப்பு, போன்ற நடவடிக்கைகளில் தமிழர்களின் கடைகளும் வயல்நிலங்களும் அழிக்கப்பட்டன. இதனூடாகத் தமிழர்களை ஏதுமற்றவர்களாக்கும் நிலையை உருவாக்க முடிந்தது. சம நேரத்தில் கண்ணில்படும் தமிழர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து போடுவதற்கான அனுமதியை அரசும் வழங்கியிருந்தது.

இந்த இரு நடவடிக்கைகளும் தெற்கில்இனி தமிழர்கள் வாழ்வது அச்சத்துக்குரியது என்ற நிலையை உருவாக்கின. பயப்பீதியில் உறைந்து, இரக்கம் கொண்ட சிங்களவர் வீடுகளில் பதுங்கிக் கிடந்த தமிழர்களை அந்தப் பிராந்தியத்திலிருந்தே வெளியேற்றுவதற்கான ஒழுங்குகளை அப்போதிருந்த சிங்கள அரசே செய்து கொடுத்தது. இந்தியாவின் உதவியும் இந்த இனச் சுத்திகரிப்பிற்குப் போதுமானளவு கிடைத்தது. தெற்கிலிருந்து தமிழர்களை அடியோடு அகற்றுவதற்கு இந்திய கப்பல்கள் பேருதவி புரிந்தன. ஆக ஓரி இனத்தை குறித்த பிராந்தியத்திலிருந்து முற்றாக அழித்தல் அல்லது அகற்றுதல் என்ற இனச் சுத்திகரிப்பின் பிரதான பண்பு ஜுலை வன்முறைகளில் நிகழ்த்தப்பட்டிருந்தது.

ஆனால் அந்தக் கோரமான நாட்களை தமிழர்கள் நினைவு வைத்திருக்கின்றனரா? தம் அழிக்கப்பட்ட கதையை முழு விபரங்களோடு பதிவுசெய்து வைத்திருக்கின்றனரா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். தமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களைப் பேசவும், பதிவுசெய்யவும் விரும்பாத சமூகமாக தமிழர்கள் மாறிவிட்டனர். எனவேதான் வேட்டையாடியவன் சொல்லிய வரலாறே தமிழர்களின் வரலாறாகவும் மாறிவிட்டது. இவ்வாறு புனையப்பட்ட வரலாற்றை வாசிக்கும் புதிய தலைமுறை, காலம் முழுவதும் அழிக்கப்பட்ட தமிழர்களின் தலையில் முழுத் தவறையும் கட்டியடித்துவிட்டு, பெரும்பான்மையினர் ஓரம் ஒதுங்கிக் கொள்கின்றனர்.

1983- இனச் சுத்திகரிப்பு சில சாட்சிகள்கூட இருந்தவையே குரோதம் செய்தவை

மரவள்ளித்தோட்டம். அதற்குள்தான் அந்த உருவத்தைக் கண்டுபிடித்தேன். முகம் முழுவதும் தோல்வியினாலும், வலிகளினாலும் ரேகைகள் ஆழப்படிந்திருந்தன. கண்கள் எப்போதோ ஒளியிழந்திருந்தன. இரண்டு பரப்பு அளவிலான காணிக்குள் நடப்பட்டிருந்த மரவள்ளிக்கும். வாழைக்கும் தண்ணீர் இறைத்துக்கொண்கொண்டிருந்தார் அவர். “முப்பது வருசம் தம்பி. இதுதான் என்ர தொழில். நாங்க 83 ஆம் ஆண்டு கலவரத்தில அடிபட்டு யாழ்ப்பாணம் வந்திட்டம். வந்த ஆறு மாசத்தில அவருக்கு ஹார்ட்அட்டாக் வந்து மோசம் போயிற்றார். அன்றையில இருந்து 6 பிள்ளையளயும் இப்பிடி வேலைசெய்துதான் வளர்த்தன். இப்ப பிள்ளையள் எல்லாரும் நல்லாயிருக்கினம். வீட்டில இருந்த வருத்தம், யோசனை வருமெண்டு இந்தத் தொழில விடாம செய்துகொண்டிருக்கிறன். என்னை தேவையளுக்கு இதில வாற வருமானம் போதுமாயிருக்கு”, எனத் தன் அறிமுகக் குறிப்பைத் தந்து முடிக்கிறார்.

 

“அப்ப நாங்கள் இரும்புக் கடை வச்சிருந்தனாங்கள். அவர் இரும்பு சாமான்கள் செய்யிற தொழிற்சாலையும், கொழும்பில இருந்து கொண்டு வாற இரும்பு சாமானுகள வேற இடங்களுக்கு வாகனங்களில் கொண்டுபோய் விற்க குடுக்கிற வேலையும் செய்தவர்கள். சிங்கள ஆக்கள்தான் எங்கட கடையில வேலை செய்தவை. கலவரம் தொடங்கின பிறகு, எங்கட கடையில வேலை செய்த ஆக்கள்தான் முதலில் கொள்ளையடிக்க வந்தவையள். கம்பியள், கொட்டனுகள், கத்தியளோட கொஞ்ச பேர் எங்கட கடைக்குள்ள உள்ளட்டினம். எங்க வீடு கடையோடதானிருந்தது. காடையர்கள் வந்ததும் பிள்ளைய தூக்கிக் கொண்டு அங்க இருந்து பின்பக்கத்தால ஓடினம். அவருக்கு தெரிஞ்ச இன்னொரு சிங்களவர், 3 நாள் எங்கள மறைச்சி வச்சிருந்தவர். பிறகு கப்பலில ஏத்திவிட்டார். கடையப் பாக்காம கூட வந்தம். கடையில அவ்வள சாமானுகளும், 18 லட்சம் ரூவா காசும் இருந்தது. வந்து ஆறு மாசத்துக்குள்ள அந்தக் கவலையிலயே அவர் செத்துப் போனார். அதுக்குப் பிறகு 30 வருசமா நான் பட்ட கஷ்ரங்கள் கொஞ்சநஞ்சமில்ல” என அந்தப் பெண் கதை முடிக்கையில் கிளம்பிய கண்ணீர், ஒரு பெண் தமிழ் சமூகத்தில் தனித்துவிடப்படுகையில், எதிர்கொள்ளும் முழுப் பிரச்சினைகளையும் உணர் முடிந்தது.

 

கோயில் கோபுரத்தில ஏறி சிங்கக்கொடிய பறக்கவிட்டாங்க

அவர் மலையகத் தமிழர். 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி பாரதிபுரத்தில் தற்போது வசித்து வருகின்றார். “அந்தப் பகுதியில் ரெண்டு தமிழ் குடும்பங்கள்தான் இருந்திச்சி. மிச்ச எல்லாருமே சிங்களவங்க. நாங்களும், எங்களோட உறவுக்கார ஒரு குடும்பமும்தான். 83 கலவரத்துக்கு பயந்து எங்கயாவது போயிரலாம்னு நெனைச்சோம். அதேமாதிரி ரெண்டு குடும்பமும் அந்த இடத்த விட்டு புறப்பட்டோம். நாங்க போன பிறகு வீடுகள, வீட்டில இருந்த எல்லாத்தையும் சிங்களவங்க எரிச்சிட்டாங்க. கோழி, ஆடு, மாடுன்னு கண்ணுல கண்ட எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டாங்க. மாத்தள முத்துமாரியம்மன் கோயிலக் கூட அவங்க விட்டுவைக்கல. அந்தக் கோயில் கோபுரத்தில ஏறி சிங்கக் கொடிய பறக்கவிட்டாங்க. கல்யாண மண்டபம், ஐயர் வீடு எல்லாத்தையும் நெருப்பு வச்சி எரிச்சிட்டாங்க. எரிஞ்சி கொண்டிருந்தத பார்த்துக் கொண்டே ஓடி வந்தம். அதுக்குள்ள இருந்து ஆமதுருமார் வெளிய வந்தாங்க. இப்பிடி கலவரம் நடந்துகொண்டிருக்கையில, 28 ஆம் திகதி ஒரு சிங்கள இளைஞன சுட்டுட்டாங்க. அந்த இளைஞரையும் தமிழங்கதான் சுட்டுக்கொன்னுட்டாங்கன்னு வதந்தி பரவிச்சுஇ அதோட எங்கயோ இருந்து 3 லொறிகளில் சிங்களவங்க வந்தாங்க. வீடுகளெல்லாத்தையும் அடிச்சி உடைச்சாங்க. என்னோட தம்பி வீட்டையும் எரிச்சிட்டாங்க. அதைக் கேட்டு ஓடி வந்த மற்ற தம்பிய வெட்டி வயலில போட்டுட்டாங்க. அவன ஆஸ்பத்திரிக்கு கோண்டு போக விடல. தடுத்து நிறுத்திட்டாங்க. வீட்டையும், கடைகளையும், அடிச்சி நொருக்கீட்டாங்க. அம்மாவோட நகை எல்லாத்தையும் பறிச்சிட்டாங்க. மூக்குத்திய கழட்ட தொடங்கினாங்க. அது கழண்டு போகல. மூக்க அறுத்து எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. அம்மா அழுதாங்க. அதுக்குப் பிறகு நாங்க கிளிநொச்சி வந்திட்டம். இங்க ஆரம்ப காலங்களில கஸ்டமா இருந்தாலும், பிறகு ஏதாவது தொழில் செய்து வாழப் பழகீட்டம். இந்த இழப்புக்களோட இங்க நடந்த சண்டைகளிலயும் பல இழப்புக்கள கண்டம். இது எதுக்குமே நட்டஈடு தரல்ல” என அவர் முடித்தார்.

மண வீட்டில் அறுக்கப்பட்ட மாங்கல்யம்

அவர் ஒரு தமிழ் ஆசிரியர். தமிழனால் பிறந்து தமிழையே கற்பித்து தமிழுக்காகவே வாழ்ந்தவர். பெயர் சரவணமுத்து கந்தப்பு. அவரின் சொந்த இடம் கரவெட்டி. தமிழ் கற்பிப்பதற்காகத் தற்காலிகமாக ஹிங்குராங்கொடையில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

தமிழ் பற்று மிக்கவர். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தமிழுக்காக “மற்றவர்களுடன்” சொற்போர் நடத்துபவர். மனைவி மற்றும் 5 பிள்ளைகளும் கரவெட்டியிலேயே இருந்தனர். அவர் மட்டும் ஹிங்குராங்கொடையில் வசித்தார். தமிழன். தம்மிடையே வாழ்ந்து கொண்டு தன் நாட்டையும் மொழியையும் பற்றித் தம்பட்டம் அடிப்பதா என்ற துவேச உணர்வு நெடுங்காலமாய் அங்கிருந்த சில சிங்களவர்களிடம் மேலெழுந்திருந்தது. அந்தப் புகைச்சல் பெருந்தீயாய் பற்றி எரிவதற்கு இனக் கலவர நாட்கள் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது.

ஆயுதங்கள் தாங்கிய காடையர் கூட்டம் ஒன்று ஆசிரியரிடம் சென்றது. தனித்து நின்ற அவரைச் சூழ்ந்து கொண்டது. தமிழ் ஆசிரியர் கேள்வியெழுப்புதவதற்கு முன்னரே அவரின் கதையை முடித்துவிட்டனர். சுற்றி நின்றவர்கள் மாறி மாறி கத்தியால் குத்தினர். குத்திக் கிழித்து அவருடலைக் அங்கமங்கமாய் கிழித்தெறிந்தனர். ஆடு, மாடு துண்டங்கள் ஆக்கினார்கள். ஆனால் தன்னுடைய கணவனுக்கு நடந்த கொடூரத்தை கரவெட்டியிலிருந்த மனைவி அறியவில்லை.

அந்தக் காலத்தில் தொலைபேசி வசதிகள் இருக்கவில்லை. ஆயினும் அவர் அரச உத்தியோகம் என்பதால் எவ்வித பதற்றமும் இன்றி பிள்ளைகளுடன் வாழ்ந்தார். நீண்ட நாட்களாக கணவனிடமிருந்து எதுவித தகவல்களும் வரவில்லை. மாதம் ஒன்றானது. ஆசிரியரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணம் ஒன்று ஊரிலே நடப்பதற்கு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவர் வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் சரவணமுத்தர் வரலில்லை. பொலிஸ்தான் வந்தது. அவரின் இறப்புச் செய்தியை அறிவித்தது. மண வீடு மரணவீடானது. அந்த மண வீட்டில் சரவணமுத்தரின் மனைவி மாங்கல்யம் அறுத்தார்.

 

தப்பியோடிய பிள்ளைகள் இருக்கின்றனரா? இல்லையா என்றே தெரியாது

கிரிபத் கொடையில் ஒரு சம்பவம் நடந்தது. நான்கு பிள்ளைகளையும், பெற்றோரையையும் உள்ளடக்கிய தமிழ் குடும்பமொன்று வசித்து வந்தது. சற்று வசதி படைத்தவர்கள். நாடெங்கிலும் பரவிவந்த கலவரத்தைக் கேள்வியுற்றபோதிலும் அங்கு வாழ்ந்த பெரும்பான்மையானோர் உயிருக்கு அஞ்சி, ஓடிவிட்ட போதிலும், இந்தக் குடும்பம் இருந்த வீட்டைவிட்டு அசையவேயில்லை. அங்கேயே இருந்தனர். காரணம் அவர்கள் வாழ்ந்த விதம் அப்படி. அண்ணனாய், தம்பியாய், சகோதரியாய் ஆபத்து வேளையில் அடுத்தவருக்கு உதவும் தமிழ் பண்பு நிறைந்தவர்களாய் வாழ்ந்தார்கள். பாலுண்ட வீட்டுக்கு பாதகம் நினைக்கும் பாவிகளாய் அங்கிருந்த சிங்களவர்கள் மாறுவார்கள் என்று அவர்கள் நினைக்கவேயில்லை. அத்தோடு எதற்கும் அஞ்சாத துணிவோடு அந்தக் குடும்பத் தலைவன் இருந்ததும் ஒரு காரணம்.

தமிழன் தங்களுக்கு அஞ்சி, அடங்கி அடிபணிந்து வாழ வேண்டும் என்பதே சிலரின் இரத்தத்தில் ஊரிய எண்ணம். அவர்களின் அந்த எண்ணத்தையே மாற்றிவிடக் குடியவகையில் அந்தக் குடும்பணம் அடிபணியாக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வந்தது. அது அங்கு வாழ்ந்த சிங்களவர்களுக்கு ஆச்சரியத்தையும், பொறாமையையும் ஏற்படுத்தியது. அவர்களின் வீரத்துக்கு முடிவுகட்டும் நோக்கோடு, நாடு முழுவதும் பரவியிருந்த கலவரக் கூட்டத்தின் அங்கத்தினர் அந்தக் குடும்பம் நோக்கியும் வந்தனர். சில காடையர்கள் முன் வந்தனர். அங்குடும்பத்தினரை வீட்டைவிட்டு வெளியேறும்படி ஏற்கனவே எச்சரித்ததன்படி அவர்கள் “ நீங்கள் இன்னும் போகவில்லையா?” என்று கேட்டனர்.

 

அதற்கு அந்தக் குடும்பத்தின் தலைவன், போகவில்லை, போவதற்கு எண்ணமுமில்லை என்று பரிந்துரைத்தார். அத்தோடு பின்வாங்கிய காடையர் குழு, இரவில் மேலும் சில காடையர்களோடு களமிறங்கியது. அவ்வீட்டை நோக்கி கற்களை வீசினர். கெட்ட வார்த்தைகளால மழை பொழிந்தனர். அவர்களின் அட்டகாசம் சகிக்கக் கூடியதாய் இல்லை. வீட்டுக்காரர் பொறுமையிழந்தனர். அதுவரை அவர் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுக்கு விடுதலை கொடுத்தார். அவர் தன் துப்பாக்கியை எடுத்துக் காடையர்களை நோக்கி சுட்டார். துப்பாக்கி வெடிச் சத்தங்கள் அந்தக் கிராமமே அமைதியடைந்தது. ஆர்ப்பாட்டம் செய்த காடையர்கள் காணாமல் போயினர். இருளுக்குள் மறைந்துவிட்டனர்.

அவர்கள் ஓடிவிட்டாலும், அடுத்து ஏதும் நடக்கலாம் என்பதை அனுமானித்திருந்த தமிழ் குடும்பம் வீட்டுக் கதவை உட்பக்கமாகப் பூட்டிக்கொண்டது. அவ்வேளையில் அனாதையான குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுக்க அப்போது யாருமிருக்கவில்லை. கடவுளை மட்டுமே நம்பிக்கொண்டு அந்தக் குடும்பம் பிரார்த்தனையில் ஈடுபட்டது. அதுவே அக்குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து மேற்கொண்ட இறுதிப் பிரார்த்தனை.

சற்றுநேரத்தில் வீட்டுக்கு வெளியே பெரியளவில் ஆரவாரம் கேட்டது. இம்முறை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட காடையர்கள் அந்த வீட்டின் முன்னே வந்து நின்றனர். இம்முறை அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திக்குத் திணறியது அந்தக் குடும்பம். பிள்ளைகள் பயத்தினால் கூச்சலிட்டனர். அழுதனர். இனியும் ஏதாகிலும் செய்யாவிட்டால் வீடு நிர்மூலமாகிவிடும் என்பதையுணர்ந்த குடும்பத் தலைவன் அவரும் மனையும் இறந்தாலும், பிள்ளைகளாவது தப்பிப் பிழைக்கட்டும் என்று தீர்மானித்தார். கதவினை உடைக்கும் முயற்சியில் காடையர் கூட்டம் இறங்கியது. திடீரென வீட்டின் ஒருபக்கம் தீமூட்டப்பட்டு எரியத் தொடங்கியது. அந்தக் குடும்பத் தலைவன் துரிதமாய் செயற்பட்டு வீட்டின் பின்புறமுள்ள வாசலால் பிள்ளைகளை வெளியே அனுப்பினார்.

மறுகணம் வீட்டின் கதவு உடைந்தது. காடையர் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தது. எஞ்சி நின்ற மனைவியையும், கணவனையும் ஐந்து நிமிட இடைவெளியில் கொத்திப் பிளந்தனர். நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் கணவனும், மனைவியும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பிள்கைள் தப்பிப் போனார்களா அல்லது காடையர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமானார்களா என்பது கூட இன்னமும் தெரியவில்லை.

பிள்ளைகளோடு கிணற்றில் குதித்த தாய்

இன்னுமொரு இளந்தாய் இரு பிள்ளைகளோடு ஹிங்குராங்கொடையில் வசித்தாள். கணவன் ஏற்கனவே கைவிட்டிருந்தான். அவளும் காடையர்களின் கண்ணில்பட்டாள். இவர்களில் கையில் அகப்பட்டால் நிச்சயம் மரணம் என்று எண்ணி, ஓட்டம் பிடித்தாள். இரு பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு, வயல் வெளிகளுக்குள்ளால் ஓடினாள். ஆனால் காடையர்கள் கூட்டமோ விட்டுவைக்கவில்லை. விடாமல் துரத்தியது. ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் ஓடமுடியவில்லை. பிள்ளைகளை சுமந்துகொண் வயல் வரம்பு தாண்ட இயலவில்லை. ஓரிடத்தில் நின்றாள். நின்ற இடத்தில் பெருங்கிணறு ஒன்று இருந்தத, திரும்பிப் பார்த்தாள். காடையர்கள் நெருங்கிவிட்டனர். பிள்ளைகளை அணைத்தபடி கிணற்றில் குதித்து மாண்டாள்.

 

மரக் குதிரையும் மனுசரைக் கொன்றது

மூன்று பேர் இருந்த வீடு அது. அவர்களின் பெயர் தெய்வேந்திரம், சிவப்பிரகாசம், விஸ்வலிங்கம். கலவரக்காரரகளைக் கண்டவுடனே வயதில் இளையவரான தெய்வேந்திரமும், சிவப்பிரகாசமும் ஓடிவிட்டனர். விஸ்வலிங்கம் 59 வயதான முதியவர். பத்துப் பிள்ளைகளின் தந்தை.

உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். காடையர்கள் சூழும்போது நன்று அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். பொல்லுகளாலும், இரும்புக் கம்பிகளாலும், போட்டுப்பிடித்தனர். உடலெங்கும் காயம். குருதி கொப்பளிக்க நிலத்தில் வீழ்ந்தார். கும்பிட்டுக் கெஞ்சினார். கொலை வெறிக் கூட்டத்திற்கு நன்கு போதையேற்றப்பட்டிருந்தது. கண்தெரியாதளவுக்கு இரத்தப் போதை. தொடர்ந்தும் நிலத்தில் போட்டு மிதித்தனர். முதியவருக்கு வாயிலிருந்து நுரை வெளியேறியது. ஆள் இறந்துவிட்டார் என எண்ணிய காடையர் கூட்டம், பக்கத்திலிருந்து குதிரை வாகணத்தை அவர் மீது பாரமேற்றிவிட்டு சென்றனர். குறையுயிராய்க் கிடந்தவரை மரக் குதிரை பாரம் அழுத்திக் கொன்றது.

Leave a comment