வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதி வழியிலான கவனயீர்ப்பு போரணி இன்று காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு பேருந்து நிலையத்துக்கு அண்மையில் ஆரம்பமாகி மாங்குளம் முல்லைத்தீவு வழியாக நகர்ந்து சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நிறைவடைந்து. அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி அவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்த நாம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதோடு இச் செயற்ப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
இலங்கையில் நீதிபதி ஒருவருக்கு ஏற்ப்பட்டிருக்கும் இவ் அசாதாரண நிலைமை என்பது தற்காலத்தை அளவிடக்கூடிய ஒரு எடுகோளாகவே விளங்குகிறது.
இச்சம்பவமானது நீதித்துறைக்கு மாத்திரமின்றி நீதியை நிலைநாட்ட விளையும் தனியார் நிறுவனங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செயற்ப்பாட்டாளர்கள் சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகவே உள்ளது.
கௌரவ யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி அவர்கள் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்து நீதியை நிலைநாட்ட எடுத்துவரும் அண்மைக்கால முயற்ச்சிகள் பாதிக்கப்பட்டவர்களின் மத்தியில் ஓர் நம்பிக்கையை ஏற்ப்படுத்தியிருந்தது. இன்று அவர்கள் கண்கலங்கி நிற்பதானது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீது விழுந்த பேரிடி என்றே கருதுகிறோம். இத் தாக்குதல் சம்பவமானது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையே காட்டி நிற்கின்றது. இதன் மூலம் இலங்கையில் நீதியை நிலைநிறுத்தவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் செயற்ப்படும் செயற்ப்பாட்டாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியே இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் வடமாகானசபை உறுப்பினர்களான து.ரவிகரன் க.சிவநேசன் மக்கள் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் என பலதரப்பட்டோரும் கலந்துகொண்டனர்.