யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்களின் பின்னரும் நிலவும் காணாமல் போனோர் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணுமாறு அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
யுத்தகாலத்திலும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களையும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தையும் அரசாங்கம் வெளிப்படுத்தி, அவர்களது உறவினர்களை சந்திக்க இடமளிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
காணாமல் போனோரது விவகாரம் தீர்க்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
அவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் விரைவாக செயற்பட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.