மருத்துவர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பு

259 0

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பல்லைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றிய நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத்தை வெள்ளைவான் கடத்தல் பாணியில் கைதுசெய்ய பொலிசார் மேற்கொண்ட முயற்சியை கண்டித்து அரச வைத்தியசாலை மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அடையாள பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று காலை 8 மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விகாரமாதேவி பூங்காவில் நடைபெறவுள்ள மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான பாரிய கண்டனப் பேரணிக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள அரச மருத்துவர் சங்கத்தின் கட்டத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவ பீடங்களின் மாணவர்களின் பெற்றோர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதகிள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதற்கமைய கூட்டம் முடிவடைந்த பின்னர் வெளியில் வந்த பல்லைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றிய நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத்தை வெள்ளை வானில் வந்த கும்பலொன்று கடத்திச் செல்ல முற்பட்டது.

எனினும் அங்கிருந்த அரசியல்வாதிகள், மாணவர்கள் ஒன்றிணைந்து அதனை தடுத்து ரயான் ஜயலத்தை காப்பாற்றியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், சைட்டம் பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசுடையைாக்க வேண்டும் அல்லது இழுத்து மூட வேண்டும் என்று கோரியும் இன்றைய தினம் மீண்டும் பணிபகிஷ்கரிப்பு நடத்தப்படுகின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் இன்று  பணிப் புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a comment