கொலை முயற்சியில் சம்பந்தப்பட்டவர் ஒரு நீதிபதி இளஞ்செழியன் என்பதைத் தெரிந்தும் பொலிஸார் ஏன் அவசரப்பட்டு ‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’ என்று செய்தி சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்து நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்ந்தும் நீதிக்காகக் குரல் எழுப்பும் அனைத்துத் தரப்பினராலும் கண்டனம் வெளியிடப்பட்டு வருவதும், உண்மை கண்டறியப்பட்டுக் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கும் மேலாக எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வன்முறைகளும் இடம்பெறக் கூடாது எனவும் குரலெழுப்பி வருவது வரவேற்கப்பட வேண்டும்.
அண்மைக் காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறைகள் குறிப்பாக தமிழ் இளைஞர் குழுக்களாக வாள்வெட்டு, கடத்தல், கற்பழிப்பு, போதைப் பாவனை, சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் காவல் துறையினரால் அச்சுறுத்தல், துப்பாக்கிப் பிரயோகத்தினால் கொலைகள் இடம்பெற்று வருவது கட்டுப் பாடற்று நடைபெறுவதற்கு எதிராகக் காவல் துறையின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
இதனால் இத்தகைய சம்பவங்கள் கட்டுப்பாடற்றுச் செல்கின்றன என்று விமர்சனங்களும் எழுந்து வருகின்றது.
இந்த சம்பவங்களின் உச்சக்கட்டமாகவே புங்குடுதீவு மாணவி வித்தியா கற்பழிப்பு கொலை விசாரணைகள் தீர்ப்பாயத்தினால் (ட்ரயல் அற் பார்) விசாரணை நடைபெறுகின்றது.
காவல்துறை மீது வலுவான குற்றச்சாட்டுக்களும் எழுந்திருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளினால் குறிப்பாக நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்புக்கள், நடவடிக்கைகளினால் மேற்குறித்த வன்முறைகள், சட்ட அத்துமீறல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் குறைவடைய ஆரம்பித்தன.
ஆனால் நீதிபதி இளஞ்செழியனையே குறிவைத்து நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி வேட்டுக்கள், அவரின் உயிரைப் பாதுகாக்க உடன் செயல்பட்ட காவலர்களில் ஒருவர் உயிரிழந்தும், இன்னொருவர் படுகாயமடைந்தும் அவல நிலையடைந்திருப்பது அனைவருக்கும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதன் விளைவாக நீதிகோரி கண்டனங்கள், பொது வேலை நிறுத்தம் எனும் மக்கள் கிளர்ச்சி எழுந்திருக்கிறது.
இதனிடையே இன்றைய செய்திகளில் இந்த ‘கொலை முயற்சியில் இலக்கு நீதிபதி இளஞ்செழியன் அல்ல’ என பொலிஸ் தரப்பபுச் சொல்கிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
நீதிபதி இளஞ்செழியன் தன்னைப் பாதுகாக்கத் தன்னுயிரைத் தியாகம் செய்தனர் என காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்.
அந்த கொடிய சம்பவத்தில், கொலை முயற்சியில் சம்பந்தப்பட்டவர் ஒரு நீதிபதி இளஞ்செழியன் என்பதைத் தெரிந்தும் பொலிஸார் ஏன் அவசரப்பட்டு ‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’ என்று செய்தி சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றோம்.
விசாரணைகள் முடிந்து விட்டனவா என்ற கேள்வியும் நீதிபதி இளஞ்செழியனின் கருத்துக்களுக்குச் சவால் விடுவதுமாகவே பொலிஸ் தரப்புச் செய்தி இருக்கின்றதென்பதை பகிரங்கமாகக் குறிப்பிடுகின்றோம்.
அப்படியானால் அந்த சம்பவத்தின் இலக்கு யாருக்கு எதிரான தென்பதையும் சொல்ல வேண்டும். இந்த சம்பவம் வேதனை மிக்கதும் கண்டனத்திற்கும் உரியதாக இருக்கும் போது பொலிஸாரின் அவசரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஜனாதிபதி நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆறுதல் சொல்லி பூரண விசாரணைக்கு உத்தரவிட்ட பொழுது பொலிஸாரின் அவசரச் செய்தியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.
இலங்கையில் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதும் நீதித் துறைக்குச் சவாலை ஏற்படுத்தியிருப்பதும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடியதென வற்புறுத்துகின்றோம்.
இத்தகைய சம்பவங்களினால் வடக்கில் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் கைவிடப்படுவதன் மூலம் மீண்டும் காவல் துறையின், இராணுவ அடக்கு முறையின் தேவை ஏற்பட்டுள்ளதென்ற ஒரு நிலையை அரசு ஏற்படுத்திவிட இடம் அளித்துவிடக் கூடாது.
நீதிபதி இளஞ்செழியன் மீது, நீதித் துறையின் மீது வன்முறை, துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்டிருப்பதன் உண்மையை அறிய வேண்டும்.
இது ஒரு தனி நபரின் செயலா அல்லது இதற்குப் பின்னணியிலுள்ளவரின் திட்டமிட்ட சதியா என்பதை தகுந்த சட்ட பூர்வமான விசாரணையினால் கண்டறியப்பட வேண்டும்.
பொதுமக்களை மட்டுமல்ல நீதிபதிகள், நீதித்துறையை பாதுகாக்கவும் பொருத்தமான நடவடிக்கைகளையும் ஜனாதிபதியும், அரசும் சர்வதேச சமூகமும் உடன் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.