பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியின் வீடு அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் உள்ளது தகவல் தொழில்நுட்ப பூங்காவான அர்பா கரிம் டவர். இப்பகுதியில் முதல் மந்திரியின் மாடல் டவுன் குடியிருப்பு உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அர்பா கரிம் டவருக்கு வெளியே இன்று பிற்பகல் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் 22 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.