கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அப்போது டிரம்புக்கு (தற்போதைய ஜனாதிபதி) ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவின் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் மாளிகையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட ஒரு வக்கீலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் சந்தித்ததாக சில நாட்களுக்கு முன்பாக பரபரப்பு தகவல் வெளியானது.
இதுபற்றி அவரிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது. இதையடுத்து, குஷ்னர் அமெரிக்க செனட் சபையின் புலனாய்வு குழு முன்பாக நேரில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்கிறார்.
இதேபோல் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழு முன்பாக இன்று அவர் ஆஜராகிறார். அப்போது டிரம்புக்கு ஆதரவாக செயல்பட ரஷியாவின் ஒத்துழைப்பு நாடப்பட்டதா? என்பது குறித்து 2 சபைகளின் எம்.பி.க்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புவார்கள் என்று தெரிகிறது.