அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிடிவி தினகரன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குக்கு தடை விதிக்கக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்கவும் டிடிவி தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தினகரன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘தினகரன் மீது ஏப்ரல் 19-ம் தேதி வரை பதிவான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பங்கேற்கும் வகையில் புதிய குற்றச்சாட்டுகளை ஜூலை 31-ம் தேதிக்குள் ஒரே நாளில் பதிவு செய்ய வேண்டும். உத்தரவு கிடைத்த 3 மாதத்திற்குள் தினகரன் மீதான விசாரணையை முடிக்க வேண்டும். வழக்கை தினமும் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும். ஏற்கனவே காலதாமதமான இந்த வழக்கை மேலும் தாமதப்படுத்தக்கூடாது’ என எழும்பூர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.