ஜோர்டான் நாட்டில் இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

250 0

ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரக வாளகத்துக்குள் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்‌ஷா மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் போலீசார் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ‘மெட்டல் டிடெக்டர்களை’ பதிக்க இஸ்ரேல் முடிவு செய்து உள்ளது. இதற்கு ஜோர்டான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இஸ்ரேலை கண்டித்து ஜோர்டானில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.

இதனால் ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த தூதரக வாளகத்துக்குள்ளேயே தூதரக ஊழியர்களின் வீடும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தூதரக ஊழியர் ஒருவரின் வீட்டில் மர சமான்களை சரிசெய்வதற்காக தொழிலாளி ஒருவர் வந்திருந்தார். அப்போது வீட்டின் உரிமையாளரும் உடன் இருந்தார். இவர்கள் இருவரும் ஜோர்டான் பிரஜைகள் ஆவர்.

அப்போது வீட்டு வேலைக்காக வந்திருந்த தொழிலாளி திடீரென தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேல் நாட்டு காவலாளியை கூர்மையான ஆயுதத்தால் குத்தினார். இதையடுத்து காவலாளி தனது துப்பாக்கியால் ஜோர்டான் தொழிலாளியை சுட்டுக்கொன்றார். துப்பாக்கிச்சூட்டின் போது அருகில் இருந்த வீட்டின் உரிமையாளரின் உடலிலும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

படுகாயம் அடைந்த இஸ்ரேல் காவலாளி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஜோர்டான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் இருநாடுகளுக்கு இடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment