இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் என கூறி பகிரங்கமான முறையில் தன்னிடம் குண்டு உள்ளது ஏற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கம்பன்விலவை கைதுசெய்து விசாரணை செய்யவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் 22வது ஆண்டு நிறைவினையொட்டி கழகத்தின் மூத்த உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.சக்தி இளைஞர் கழகத்தின் தலைவர் பு.விதுசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின்போது சக்தி இளைஞர் கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தில் இருந்து பணியாற்றி விடைபெற்றுச்செல்லும் 70க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இளைஞர் யுவதிகள் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி சதீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த காலத்தில் எமது இனத்திற்காக தமிழ் மக்களின் விடிவுக்காக இளைஞர் யுவதிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.இவ்வாறான இளைஞர் நிகழ்வுகளில் அவர்களையும் நினைத்துப்பார்க்கவேண்டும் என இங்கு கேட்டுக்கொள்கின்றேன்.அவர்களின் தியாகங்களை நாங்கள் சிந்தித்துபார்க்கவேண்டும்.அவர்களின் தியாகங்கள் ஒருநாள் எமது மக்களுக்கு விடிவினைப்பெற்றுத்தரும்.கடந்த காலத்தில் மகிந்த என்னும் அரக்கர் ஆட்சியை சிறுபான்மை சமூகம் மாற்றி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியை ஏற்படுத்தியது.இந்தவேளையில் கடந்த காலத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் தமக்கு நடந்த அநீதிகளை அச்சமின்றி வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்று இருந்தால்,இந்த ஆட்சியில் தமிழ் மக்கள் நம்பிக்கைகொள்ளவேண்டுமாகவிருத்தால் இந்த அரசாங்கம் முன்னாள் போராளிகள் தொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும்.நடந்த சம்பங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவேண்டியதேவைப்பாடு இந்த அரசாங்கத்திற்குள்ளது.தமிழ் இனத்திற்காக எவ்வளவோ வேதனைகளை அவர்கள் சுமந்து நிற்கின்றார்கள்.மகிந்த ராஜபக்ஸ என்னும் ஒரு குடும்ப அரச ஆட்சியை நடாத்தினார்கள்.தமிழ் மக்களை கொன்றொழித்து அப்பாவி சிங்கள மக்களிடம் தான் சிங்கள சிங்கம் என்ற போலி மாயையை காட்டி மீண்டும் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற நப்பாசையில் இரண்டு வருடம் பதவிக்காலம் இருக்கும்போதே ஆட்சியை கலைத்து தேர்தலை நடாத்தினார்.ஆனால் பெரும்பான்மை மக்களினதும் சிறுபான்மை மக்களினதும் ஆதரவுடன் மகிந்த தூக்கியெறியப்பட்டுள்ளார்.நீதி மரணிக்கவில்லையென்பதே இதற்கு எடுத்துக்காட்டாகும்.
கடந்த காலத்தில் தன்னுடன் ஒன்றாக இணைந்து பணங்களை சூறையாடிய சில அரசியல்வாதிகளை இணைத்துக்கொண்டு தற்போதைய அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புவதற்காக கண்டியில் இருந்து கொழும்புக்கு சென்றவர் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென்பது போன்று பல பொய்களை அவிழ்த்துவிட்டுவருகி;ன்றார்.அவருக்கு துணையாக தமிழ் மக்களுக்கு எதிராக என்றும் செயற்பட்டுவரும் விமல்வீரவன்ச மற்றும் உதயகம்பன்வில ஆகியோர் மகிந்தவுடன் இருந்தே வளம்பெற்றனர்.மகிந்த ஆட்சி அமைக்கும்போதே அவருடன் இருந்துதான் வளத்தினைப்பெற்றுக்கொள்ளலாம் என்ற ரீதியிலேயே அவர்களும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர்.உதயகம்பன்வில ஒரு பாராளுமன்ற உறுப்பினர்,ஒரு கட்சியின் தலைவர்.அவர் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துகளை கூறிவருகின்றபோதிலும் அவரின் கருத்துகளை பெரும்பான்மையின மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
தற்போது அவர் இந்தியா இங்குவரப்போகின்றது.அதனை நாங்கள் எதிர்க்கவேண்டும்.இந்தியா பாலம் கட்டினால் அதனை குண்டுவைத்து தகர்ப்பேன் என கூறுகின்றார்.இந்த அரசாங்கம் இனியும் இவ்வாறானவர்களை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. அவரிடம் குண்டு உள்ளது.அதனை தேடிக்கண்டுபிடிக்கும் செயற்பாட்டினை இந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.ஒரு சாதாரண நபர் இதனைக்கூறியிருந்தால் உடனடியாக அவரின் வீட்டினை சுற்றி ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டிருக்கும்.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குண்டுகளை வைத்திருக்கின்றார் என்றால் அவரை சும்மா வைத்திருப்பது நியாயமான விடயம் அல்ல.அவர் சும்மா சொல்லியிருக்கமுடியாது.அவர் சாதாரண மனிதர் அல்ல சமூகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி.அவர் குண்டு வைத்து தகர்ப்பேன் என்று கூறியவுடன் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.
மகிந்த தனது யாத்திரையின்போது தமிழர்களையும் தமிழர்களின் பிரச்சினைகளையும் வைத்தே வியாபாரம் செய்தார்.இன்று இலங்கையில் அனேகமான கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தவேளையில் இந்த ஆட்சியினால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கருதும்வேளையில் பெரும்பான்மை மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என கருதும்வேளையில் மீண்டும் இந்த நாட்டில் யுத்ததினை ஏற்படுத்தும்போதே தாங்கள் அரசியல் நடாத்தமுடியும் என்ற ரீதியில் கொள்ளைக்குழுவினர் இந்த ஆட்சியை மாற்றவேண்டும் என முயற்சித்துவருகின்றனர்.மகிந்த ராஜபக்ஸ அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாக இருக்கமுடியாத காரணத்தினாலேயே அவர் நடந்துதிரிகின்றார்.அவர் ஓரிடத்தில் இருக்கும்போது பல்வேறு சிந்தனைகள் அவரை ஆட்கொள்கின்றது.இன்று இருக்கும் இந்த அரசாங்கம் கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறினைப்போன்று மீண்டுமொரு தவறிரிழைக்காமல் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது.