யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது வைக்கப்படதல்ல என பொலிஸார் அவசர அவசரமாக தெரிவிப்பது பலத்த சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லூரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து, நீதிபதியின் பாதுகாவலருடைய துப்பாக்கியை பறித்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் அவசர அவசரமாக கூறினார்கள்.
பொலிஸார் எதற்காக இவ்வளவு அவசரத்தை காட்டுகின்றார்கள் என்பது எமக்கே தெரியவில்லை என்பதுடன், இந்த செயற்பாடு பலத்த சந்தேகத்தை உருவாக்கியிருக்கின்றது.
இது போன்றே 2004ம் ஆண்டு நீதிபதி அம்பேத்பிட்டிய விடுதலைப் புலிகளாலேயே கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதும், பாதாள உலக குழுக்களே அதனை செய்திருந்தமை வெளிச்சத்திற்கு வந்தது.
எனவே எதனையும், ஆராய்ந்து தீர்க்கமான முடிவிற்கு வந்த பின்னதாகவே கூற வேண்டும். நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்கு இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம்.
எனவே முழுமையான விசாரணைகளை நடத்தாமல் பொலிஸார் அவசரப்படுவது எதற்காக? ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தை இந்த சம்பவம் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்று முன் தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியிருந்ததுடன், ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.