வறட்சியினால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

19876 0

நாட்டில் நிலவும் வறட்சிக் காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை , மட்டக்களப்பு , அம்பாறை , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ,யாழ்ப்பாணம் , மன்னார் , இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி நிலையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு , வடமத்திய , வடமேற்கு, வடக்கு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குருநாகல் , திருகோணமலை, புத்தளம், முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் வறட்சியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் , பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்து குறைக் கொள்ளளவில் இருந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விக்டோறியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் மொத்தக் கொள்ளளவில் 20 தசம் 9 வீதமாகும். றந்தெனியகல நீர்த்தேக்கத்தில் இந்த அளவு 8 தசம் 4 சதவீதம் வரை குறைந்துள்ளது.

60 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீர்க் கொள்ளளவு காணப்படுகின்ற நீர்த்தேக்கங்களாக போவத்தென்ன, காசல்றீ, மௌசாக்கல, தம்புளு-ஒய, உல்கிற்றிய ரத்கிந்த ஆகிய நீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் 1415 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாமில் தங்கியிருப்பதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

Leave a comment