நிலசுவீகரிப்பு,அதிகாரப்பறிப்பு,அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் பேர்னோர் விவகாரமென அனைத்திலும் எதனையும் கண்டுகொள்ளாது கள்ள மௌனம் சாதிக்கும் வடமாகாணசபையின் அரச நிர்வாகம் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து களமிறங்கியுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை நல்லூரிலுள்ள வடமாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தின் முன்பதாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை அது நடத்தியுள்ளது. அதேவேளை யாழ்.மாவட்ட செயலகத்திலும் இத்தகைய போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமது பணிகளை சிறிது நேரம் புறக்கணித்து ஊழியர்கள் வீதிக்கு இறங்கி சுலோக அட்டைகளினை தாங்கியவாறு குறித்த எதிர்ப்பு போராட்டத்தினில் ஈடுபட்டிருந்தனர்.நீதித்துறையின் தனித்துவத்தை பாதுகாக்க வலியுறுத்தியதுடன் கொல்லப்பட்ட காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் சுலோக அட்டைகளை அவர்கள் தாங்கிநின்றிருந்தனர்.
இதனிடையே தனியார் போக்குவரத்து சேவைகள் முடங்கியிருந்த போதும் போக்குவரத்து சேவை பேரூந்துகள் சேவையினில் ஈடுபட்டன.
சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினால் வடக்கு முழுவதுமான நீதிமன்ற அமர்வுகள் இன்று நடைபெறாதிருந்தது.