ஜனாதிபதி பதவியில் இருந்து இன்று ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி இன்றிரவு வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் உரையாற்றி பிரியாவிடை பெறுகிறார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25-ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் பாராளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி, எம்.பிக்கள் உள்ளிட்டோர் பிரிவு உபசார விழாவில் பங்கேற்றனர்.
நாட்டின் ஜனாதிபதியாக அவர் ஆற்றிய சேவையை பாராட்டி துணை ஜனாதிபதி அமீது அன்சாரி பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாராஜன் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பேசினர்.
விடைபெற்று செல்லும் ஜனாதிபதிக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் அடங்கிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்புரை ஆற்றினார். முன்னதாக, நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
25-7-2012 அன்று நமது நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பதவியேற்ற பிரணாப் முகர்ஜி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது ஆயுள்காலம் வரை அவர்கள் விரும்பும் பகுதிகளில் வாடகை, மின்சாரம் மற்றும் குடீநீர் கட்டணம் இல்லாமல் வீடு வழங்கப்பட வேண்டும்.
இதற்காக, டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் 11,776 சதுரடி பரப்பளவில் உள்ள பங்களாவில் பிரணாப் முகர்ஜி நாளை குடியேறுகிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது இறுதிக்காலம் வரை இந்த வீட்டில்தான் வசித்து வந்தார். அவரது மறைவிக்கு பின்னர் இந்த வீடு மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவுக்கு ஒதுக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற பின்னர் இந்த வீட்டில் குடியேற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி(81) விருப்பம் தெரிவித்திருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட இந்த வீட்டுக்கு வர்ணம் பூசும் பணிகள் மற்றும் தோட்டத்தை சீரமைக்கும் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறும் பிரணாப் முகர்ஜி, இந்த வீட்டில் குடியேறுகிறார்.
இந்நிலையில், தனது பதவிக் காலத்தில் இறுதி முறையாக நாட்டு மக்களிடையே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்றிரவு 7.30 மணிக்கு வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் உரையாற்றி பிரியாவிடை பெறுகிறார்.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெறும் அவரது உரையை நாட்டில் உள்ள அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களும் ஒலி(ளி)பரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு ஈர்க்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, 1969-ம் ஆண்டு பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இணை மந்திரி மற்றும் கேபினட் அந்தஸ்துடன் கூடிய மந்திரி என பல்வேறு பொறுப்புகளை வகித்து நாட்டின் மிகப்பெரிய பதவியான ஜனாதிபதி பதவியில் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்து இன்று விடை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.