அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சர்ச்சைக்குள்ளான ரஷ்ய தூதரின் பதவிக்காலம் முடிந்தது

276 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்ப் வெற்றிபெற உதவியதாக குற்றச்சாட்டுக்குள்ளான ரஷ்ய தூதர் செர்கி கிஸ்லியாக்கின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து அவர் பதவி விலகி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் அதிகம் இடம் பெற்ற பெயர் செர்கி கிஸ்லியாக் என்பதேயாகும். இவர் அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதராக கடந்த 2008-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸுடன் தேர்தல் பற்றி கிஸ்லியாக் பேசியதாக கூறப்படுகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செயலர் மைக்கேல் ப்ளின், கிஸ்லியாக்கை சந்தித்து பேசியதை மறைத்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதிபர் டிரம்ப்பின் மருமகன் குஷ்னேரும், கிஸ்லியாக்கை சந்தித்து பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் கிஸ்லியாக்கின் தூதர் பதவிகாலம் தற்பொழுது நிறைவடைந்துள்ளதை அடுத்து, அவர் பதவி விலகியுள்ளார். புதிய தூதர் நியமிக்கப்படும்வரை தற்போது அமைச்சர்-ஆலோசகராக இருக்கும் டென்னிஸ் கோஞ்சர் தூதராக செயல்படுவார் என அமெரிக்கவில் உள்ள ரஷ்ய தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
புதிய தூதராக ரஷ்ய வெளியுறவுதுறை துணை-மந்திரி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது நியமனம் குறித்து இதுவரை ரஷ்ய அதிபரிடம் இருந்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Leave a comment