சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட ‘கறுப்பு ஜூலை’. 22.07.2017

692 0

‘தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்’. என்பது யதார்த்த உண்மை. தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத சரித்திர நிகழ்வு கறுப்பு ஜூலை. ஆண்டுகள் பல கடந்து வந்து விட்டாலும் தமிழ் தலைமுறைப் பிள்ளைகள் அறிந்து வைத்திருக்க வேண்டிய வரலாற்றுப் பாடம்.

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை.சிங்கள ஆட்சிபீடத்தின் நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக, அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டதுடன் லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகி நின்றார்கள்.

கறுப்பு யூலையுடன் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை சர்வதேச சமூகம் இட்டிருந்தால், தமிழர்களுக்கு எதிரான கட்டற்ற வெறித்தனத்தை சிங்களம் முள்ளிவாய்க்கால்வரை தொடர்ந்திருக்காது.இராணுவ முற்றுகைக்குள் தமிழர் தாயகத்தை வைத்தபடி, தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களில் கைவைத்துள்ளது சிங்களஅரசு. பௌத்த மதத்திணிப்பை தீவிரமாய் மேற்கொண்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தாராளமாய் மேற்கொண்டுவருகின்றது.

கறுப்பு யூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், தமிழினம், தன் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்கின்ற ஒரு காலமாக இனி வரும் காலம் அமைய புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தீவிரமாய் உழைக்கவேண்டிய காலம் இது.

இதனை உணர்ந்து சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் திச்சினோ ( Ticino) மாநிலத்தில் பெலின்சோனா ( Bellinzona) நகரில், சனி 22.07.17 காலை 09:30 மணியில் இருந்து 12:00 மணி வரை வேற்றின மக்களுடன் இணைந்து கறுப்பு ஜூலை நினைவு கூறப்பட்டதுடன் இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும், தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி வேற்றின மக்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

Leave a comment