அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று அம்மாநில பெண் போலீஸ் தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார்.
அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் உள்ள மின்னேபொலிஸ் நகரில் கடந்த 15-ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 40 வயது யோகா ஆசிரியரான ஜஸ்டின் டாமண்ட், அந்நகர போலீசால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்வபம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் அதிர்வை ஏற்படுத்தியது.
ஜஸ்டின் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர், மற்றும் ஜஸ்டினின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கான பதிலை அமெரிக்கா கூற வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்து. இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில காவல்துறை தலைவர் ஜானே ஹார்டேயு பதவி விலகியுள்ளார்.
”எனது வாழ்க்கையில் மிகவும் துயரமான நிகழ்வாக இதை கருதுகிறேன். எனக்குப் பின்னால் இந்த பொறுப்புக்கு வருவோர் இது போன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என ஜானே ஹார்டேயு உருக்கமுடன் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.