சசிகலா மீது உரிய நடவடிக்கையை கர்நாடக அரசு எடுக்கும் – மு.க.ஸ்டாலின்

351 0

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சசிகலா மீது உரிய நடவடிக்கையை கர்நாடக அரசு எடுக்கும் என நம்புவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சசிகலா மீது உரிய நடவடிக்கையை கர்நாடக அரசு எடுக்கும் என நம்புவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், ஏரிகள் தி.மு.க. சார்பில் தூர்வாரப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டு, அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மரக்கன்றுகளை வழங்கியதோடு குளக்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும் மரக்கன்றுகளை ஊன்றினார். அப்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடன் இருந்தார்.

பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஊடகங்களில் எல்லாம் வந்த கடிதத்தை இல்லை என்று தலைமைச் செயலாளர் ஐகோர்ட்டில் மறுத்து இருக்கிறார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?.

பதில்:- குட்கா புகாரில், அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகளான ராஜேந்திரன், ஜார்ஜ் போன்றவர்கள் எல்லாம் மாமூல் வாங்கியிருக்கிறார்கள், லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள். புற்றுநோயை வரவழைக்கக்கூடிய தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு துணை நின்றிருக்கிறார்கள்.

அதுகுறித்து விசாரண செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை ஒரு தாக்கீது அனுப்பியிருக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் தலைமைச் செயலாளர் அது மாதிரியான தாக்கீது வரவில்லை என்று சொல்கிறார். அது அப்பட்டமான பொய்.

தலைமைச் செயலாளர் என்பவர், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கக்கூடிய அதிகாரிகளுக்கு எல்லாம் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடியவர். அவரே இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இவைகளெல்லாம் உதாரணங்களாக இருக்கிறது. ஆகவே தான், இந்த விவகாரத்தில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி:- நாடு முழுவதும் இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வரலாம் என்று இல.கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அதுப் பற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:- இல.கணேசன் மட்டுமல்ல, ஒரு பக்கம் எச்.ராஜா, வெங்கைய்யா நாயுடு என ஆளாளுக்கு ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எந்தக் காரணம் கொண்டும் அது தமிழகத்தில் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அப்படி தமிழகத்தில் அனுமதிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டால், தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடக்கூடிய நிலை உருவாகும்.

கேள்வி:- வாக்காளர்கள் எல்லாம் தமிழக அரசினுடைய ஊழல் குற்றச்சாட்டுகளை அமைச்சர்களினுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு நடிகர் கமல்ஹாசன் கூறியவுடன் அந்த இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறதே?.

பதில்:- இன்றைய விஞ்ஞான உலகில் வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிந்து கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. அப்படிப்பட்ட சமூக ஊடகங்களில் இருந்தும் அமைச்சர்களின் பக்கங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது, நடிகர் கமல்ஹாசன் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்றுதான் தோன்றுகிறது.

கேள்வி:- கர்நாடக மாநில பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கூறிய டி.ஐ.ஜி. பணிமாற்றம் செய்யப்பட்டார். இப்போது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதுபோல் செய்திகள் வெளி வருகிறதே?.

பதில்:- அந்த செய்தி உண்மை என்னும்போது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி:- சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?.

பதில்:- ஏற்கனவே சிறையில் தான் இருக்கிறார். சிறையில் இருந்தாலும், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என இப்போது சில நாட்களாக செய்திகள் வருகிறது. அதனால், இதற்கு உரிய நடவடிக்கையை கர்நாடக மாநில அரசுதான் எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பார்கள், எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

கேள்வி:- நெடுவாசல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், 45 கிராமங்களில் பெட்ரோலியப் பொருள் தயாரிக்கும் ஆலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதே?.

பதில்:- இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் எந்தப் போராட்டம் நடத்தினாலும், அதுபற்றி கவலைப்படுவதில்லை. சட்டமன்றத்தில் இந்த பிரச்சினைகளை பற்றி பேசும்போது, அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறோம் என்று முதல்-அமைச்சரே துணிச்சலாக பேசுகிறார். வளர்மதி என்ற மாணவியை இப்படி குண்டர் சட்டம் போட்டிருக்கலாமா?. வேறு சட்டத்தில் வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் சந்தித்திருக்கலாம். ஆனால், குண்டர் சட்டம் போடலாமா என்று கேட்டால், நிச்சயமாக போடுவோம் என்று வாதிடுகிறார். இப்படிப்பட்டவர்களிடம் நிச்சயமாக ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a comment