கரூர் மாவட்டத்தில் மேல் மட்ட ஆளுங்கட்சியினர் ஆதரவோடு காவல்துறையும் கூட்டுசேர்ந்து மதுபான சந்துக்கடைகளை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த ஜெயலலிதா வழிகாட்டுதலுடன் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் சென்ற கல்வி ஆண்டில் வழங்க வேண்டிய விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நேற்று) மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
17 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 4 இடங்களில் 1,560 விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. கலெக்டர் தலைமையில், மாவட்ட வருவாய் அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுவிக்கவில்லை என அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தவறாக செய்தியை பரப்பி உள்ளார். சென்ற கல்வி ஆண்டில் வழங்க வேண்டிய இந்த சைக்கிள்களை வழங்க ஏற்பாடு செய்தபோது அவர் (செந்தில்பாலாஜி) வர சம்மதிக்காததால் 4 முறை நிகழ்ச்சி தள்ளிப்போடப்பட்டது.
அதே நேரம் மாவட்டத்தின் பிற 3 தொகுதிகளிலும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலெக்டரிடமும், என்னிடமும் கோரிக்கை மனுக்கள் வந்தன. இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யும்படி கலெக்டரிடம் கூறினேன்.
அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டு முதல்-அமைச்சரிடம் தகவல் தெரிவித்து அவரது உத்தரவின் பேரில் சைக்கிள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்க கலெக்டர் மூலம் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அழைப்பிதழிலும் அவரது பெயர் அச்சடிக்கப்பட்டுள்ளது. கட்சி நிகழ்ச்சிகளுக்கு இரு எம்.எல்.ஏ.க்களுக்கும் மாவட்ட அவை தலைவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டும், கீதா எம்.எல்.ஏ. நிகழ்ச்சிகளுக்கு வருவார். அவர் (செந்தில்பாலாஜி) வருவதில்லை. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அவர் (செந்தில்பாலாஜி)நடத்தும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் படத்தையோ, என்னுடைய படம் மற்றும் பெயரை கூட போடுவதில்லை.
ஆளும் கட்சியினர் போலீஸ் துணையோடு ஓட்டல்கள் பெயரில் சாராய கடையை நடத்தி வருவதாக தவறான கருத்தை தெரிவித்துள்ளார். அதுபோல மதுபான கடைகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டவிரோதமாக மதுக்கடைகள் செயல்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். ஆளுங்கட்சி ஆசியுடன் என கூறும் இவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் இல்லையா? இவர் எந்த கட்சி பிரமுகர்.
தவறுகள் இருந்தால் காவல் துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் தாமதம் ஏற்பட அவர் கோர்ட்டுக்கு சென்றதே காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர், எம்.எல்.ஏ. கருத்து மோதல், கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.