திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கிராம எரிசக்தி மையம் செயல்படுகிறது. இதில் புதுப்பிக்கதக்க வல்ல எரிசக்தி துறையில் பிடெக், எம்டெக் பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பான எம்.பில், முனைவர் பட்டத்திற்கான பிஎச்.டி. படிப்புகளும் உள்ளது.
கோவையை சேர்ந்த மாணவர் தேவநேயன் கடந்த 3 வருடமாக பி.எச்.டி.படித்து வருகிறார். இந்த மாணவர் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக்கு சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி ஆட்டோ தயாரிக்கும் ஆராய்ச்சியில் கடந்த 1 வருடமாக ஈடுபட்டு வந்தார். இவரது ஆராய்ச்சியின் முடிவில் சூரியசக்தி மூலம் சோலார் ஆட்டோவை கண்டுபடித்து உள்ளார்.
இந்த ஆட்டோவை இந்த மாணவர் பல்கலைக் கழக துணைவேந்தர் நடராஜன், கிராம எரிசக்தி துறை இயக்குநர் பேராசிரியர் கிருபாகரன் முன்பு ஓட்டிக் காட்டினார்.
சோலார் ஆட்டோ குறித்து மாணவர் தேவநேயன் கூறுகையில் டீசல் மற்றும் பெட்ரோல் மூலமே இயக்கப்படும் ஆட்டோவில் இருந்து வெளியேறும் புகையாலும், அது ஏற்படுத்தும் ஒலியாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. 100 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டுமானால் 4 முதல் 5 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதிகளவு தடவாள பொருட்கள் உள்ளதால் பராமரிப்பு செலவும் அதிகம் ஏற்படுகிறது.
ஆனால், நான் கண்டுபிடித்துள்ள சோலார் ஆட்டோவில் புகை வராது, ஒலி வராது, பெட்ரோல், டீசல் தேவையில்லை. பராமரிப்பு செலவு இல்லை. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி இந்த ஆட்டோ இயக்கப்படுகிறது. இந்த ஆட்டோவில் மோட்டார், சூரிய ஒளியை சேமிக்க பேட்டரி, கண்ட்ரோல் பாக்ஸ், ஆட்டோவின் கூரையில் சோலார் பேனல் ஆகிய 5 பொருட்கள் மட்டுமே உள்ளது.
இந்த ஆட்டோவை தயாரிக்க ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே செலவு. 12 மணிநேரம் சூரிய ஒளி ஆற்றலை சேமித்து ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் தூரம் 50 கிலோ மீட்டர் வேகத்தில் எந்த செலவும் இல்லாமல் ஓட்டலாம்.
இந்த சோலார் ஆட்டோவில் கியர் மாற்ற தேவையில்லை. சாவியை போட்டு ஸ்கூட்டர் போல் கையால் ஆக்சிலேட்டரை திருகினால் ஆட்டோ வேகமெடுக்கிறது. ஆட்டோவில் இடதுபுறத்தில் ஒரே ஒரு சுட்ச் மட்டும் இருக்கிறது. முன்பக்கம் போட்டால் ஆட்டோ முன்னால் செல்கிறது. அதனை பின்பக்கம் போட்டால் பின்னால் செல்கிறது. பெட்ரோல், டீசல் தேவையில்லை என்றார்.