மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்

422 0

201608091045230262_Should-provide-aid-to-mentally-retarded-victims-Kanimozhi_SECVPFடெல்லி மேல்-சபையில் மனநல மசோதா 2013 பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழு தலைவருமான கனிமொழி பேசியதாவது:-

உலக சுகாதார நிறுவன புள்ளி விவரப்படி இந்தியா சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நிதியில் 0.06 சதவிகிதம்தான் மனநல மருத்துவத்துக்கு என ஒதுக்குகிறது. இந்த நிதியை வைத்துக் கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?

நம் நாட்டில் உளவியல் மருத்துவர்களுக்கு பெரும் பற்றாக்குறை இருக்கிறது. மூன்றரை லட்சம் மக்களுக்கு ஒரே ஒரு உளவியல் மருத்துவர்தான் நம் நாட்டில் இருக்கிறார்.

மனநலம் சிகிச்சைக்குண்டான மருந்துகளை கையாள பல மருத்துவர்களுக்கு தெரியவில்லை. இதனால் தேவையானவர்களுக்கு மனநல மருந்துகள் கிடைப்பதில்லை. மேலும் உளவியல் நிபுணர்களை அதிகப்படுத்துவதில் அரசு தீவிர அக்கறை காட்ட வேண்டும்.

இந்த மசோதாவில் மனநல மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பற்றி குறிப்பிடவே இல்லை. ஏற்கனவே உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் கூட முழுமையாக அவர்களுக்கு போய்ச் சேர்வதில்லை.

உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவர் மூலம் ஊனத்தின் அளவு பற்றிய சான்று பெறப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதேபோன்று மனநலம் பற்றிய விவகாரத்தில் எத்தனை சதவிகிதம் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிவதும் மிகக் கடினமான ஒன்று.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது அவர்களின் குடும்பத்தினருக்கு மனச்சுமையோடு பெரிய பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்துகிறது. எனவே மனநல மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்துக் காப்பாற்றுவதற்கான முறையான ஓர் கட்டமைப்பு மிக விரைவாக அமைக்கப்பட வேண்டியது இப்போதைய கட்டாய தேவை.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் நிலையை ஒதுக்கி வைத்து… அவர்களையும் சமூக நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் பணியை இந்த மசோதா செய்திட வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.