‘நீட்’ தேர்வை எதிர்த்து நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்கள் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

305 0

‘நீட்’ தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தொழிற் படிப்புகள் பயில நுழைவுத் தேர்வு கிடையாது என்பதை உரிய சட்டத்தின் மூலம் நிலை நாட்டியது தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு. நீதிமன்றங்களும் அதை ஏற்கும் வகையில் அந்த சட்டம் அமைந்ததால்தான் கிராமப்புற ஏழை மாணவர்களும் தங்களின் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் மூலம் டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் படித்தார்கள்.

ஆனால், நீட் தேர்வை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்த நிலையில், தமிழகத்தை ஆளும் குதிரை பேர பினாமி அ.தி.மு.க. அரசு அதனைத் தடுப்பதற்கு முழு முனைப்புடன் சட்டம் இயற்றவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றிக்கொடுத்த தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவில்லை.

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தின்கீழ் படிப்பவர்களே அதிகளவில் இருக்கிறார்கள். அவர்கள் இத்தனை காலமாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். குறிப்பாக மருத்துவத் துறையில் சிறந்த டாக்டர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

பிற மாநிலத்தவர்களும், வெளிநாட்டவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் உள்ள டாக்டர்கள் திறமைமிக்கவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், மாநில அரசின் பாடத்திட்டத்தைப் புறக்கணிக்கும் நீட் தேர்வின் மூலம், தமிழக மாணவர்களின் எதிர் காலத்தைப் பாழடித்து விடக்கூடாது என்பதற்காகத் தான், நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், முதல்கட்டமாக நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரியும் திராவிட முன்னேற்றக் கழகம் நம்மைப் போலவே மக்கள் நலனில் மாணவர்கள் எதிர் காலத்தில் அக்கறையுள்ள இயக்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இதனை தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் காதில் வாங்கவேயில்லை.

நீட் தேர்வு வராது என பொய்யான வாக்குறுதிகளை மாணவர்களுக்கு அளித்து ஏமாற்றினார்கள். நீட் தேர்வு வந்தது.

அந்தத் தேர்வின் முடிவுகளும் வெளியாயின. தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை கழகமும் மற்ற இயக்கங்களும் சுட்டிக் காட்டியதும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு என்கிற அரசாணையை வெளியிட்டு பொய்யான நம்பிக்கையை அளித்தது அரசு. அந்த நம்பிக்கையையும் நீதிமன்ற உத்தரவு தகர்த்துவிட்டது. தமிழக மாணவர்கள் தத்தளிக்கிறார்கள்.

குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதுபோல, நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி எதிர்காலத்தை இழந்த நிலையில், குதிரை பேர ஆட்சியின் அமைச்சர்கள் தங்கள் டெல்லி எஜமானர்களிடம் சென்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி ஒப்புக்கு மனு கொடுத்திருக்கிறார்கள்.

இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தவும், மத்திய அரசின் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜூலை 27-ந்தேதி தி.மு.கழகமும் தோழமைக் கட்சியினரும் இணைந்து மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இரும்பு இதயம் கொண்ட மத்திய, மாநில அரசுகளின் நீட் எனும் இரும்புக் கரத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை மீட்க, அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க, பொறியியல் உள்ளிட்ட பிற தொழிற் படிப்புகளுக்கு இத்தகைய அச்சுறுத்தல் நேராமல் தடுக்க, இணையும் கரங்களாக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது.

உண்மை நிலையை உணர மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு ஓங்கிக் குரலெழுப்பி உணரவைக்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, குட்கா ஊழல் குறித்து சட்டமன்றக் கூட்டத்தொடரில் உண்மைகளை எடுத்துச் சொல்ல எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா தமிழகமெங்கும் விற்பனையாகிறது என்பதை நிரூபிக்கும் வகையில், குட்கா பாக்கெட்டுகளுடன் சட்டமன்றம் சென்று, பேரவையிலேயே எடுத்துக் காட்டினோம். அதற்காக தி.மு.கழகத்தின் மீது உரிமை மீறல் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு கை ஓசை எழுப்புவதில்லை. ஒற்றை மனிதரின் கரங்கள் சங்கிலியாவதில்லை. ஒத்த கருத்து, ஒருமித்த எண்ணம், ஒன்றுபட்டு போராடும் மனம் கொண்ட தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று மனித சங்கலியை சீனப் பெருஞ்சுவர் போல நீளமாக்கும் பணி, தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களைச் சார்ந்தது.

தி.மு.கழகத்தின் அனைத்து அணிகளும் இந்த மனித சங்கிலியில் இணைய வேண்டும். குறிப்பாக மாணவரணியினர் அதிகளவில் பங்கேற்பதுடன், தங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்யவேண்டும். தோழமைக் கட்சியினரை வரவேற்று அவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

மத்திய-மாநில ஆட்சியாளரின் எவ்வித அடக்கு முறையும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்காமல் எங்கள் கரங்கள் பாதுகாக்கும் என்று சொல்லும் அளவில் நமது கைகள் இணையட்டும். நீட் எனும் கொடுந்தடை தகரட்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a comment