ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக அவர் வருகிற 24-ந்தேதி சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத்கோவிந்த் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அவர் வருகிற 25-ந்தேதி புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொள்கிறார். டெல்லியில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அனைத்து மாநில கவர்னர்கள், முதல்- மந்திரிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார். இதற்காக அவர் வருகிற 24-ந்தேதி சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார்.
முன்னதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று மாலை அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, திருத்தணி அரி, முத்துகருப்பன், கோபாலகிருஷ்ணன் உள்பட 25 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், பி.தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்கருப்பன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்த எங்கள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண் டார்.வருகிற 5-ந்தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பதாக கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதை அனைத்து எம்.பி.க் களும் ஏற்றுக் கொண்டோம்.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.