இந்நாட்களில் அதிக வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் வெள்ளி(28), சனி(29) மற்றும் ஞாயிறு(30) ஆகிய மூன்று நாட்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதன்படி, வெள்ளிக்கிழமை (29) கல்வி நடவடிக்கை நடைபெறாது.
அன்றையதினம் மாணவர், பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர் மற்றும் அயலவர்கள் இணைந்து பாடசாலை, அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
இதற்கு சுகாதார அமைச்சு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
வெள்ளிக்கிழமை, பாடசாலை மாணவர்கள் சீருடை அல்லது சிரமதானத்துக்கு பொருத்தமான உடைகளை அணிந்துவர அனுமதி பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் மாணவர்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த தினங்களில் புகை விசுறுதல் மற்றும் ஏனைய டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பிரதேச சுகாதார அதிகாரி மற்றும் ஊழியர்களை இணைத்துகொண்டு செயற்படுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.