முல்லைத்தீவு கேப்பாபுலவில் 189 ஏக்கர் பரப்பு காணி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் இன்று விடுவிக்கப்பட்டது.
எனினும், குறித்த காணி விடுவிக்கப்பட்டபோது, சுமூகமற்ற நிலைமையொன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் காணிகள் அல்லாமல், வேறு தரப்பினரின் காணிகளே விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த சுமூகமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் சுவாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் பொதுமக்களிடம் கூறியதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெறும் குறித்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு அமைச்சு மற்றும் படைத் தரப்பினர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதன்போது இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.