போதைப்பொருட்கள் அற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டையும் நாட்டு மக்களையும் போதைப் பொருள் பிடியிலிருந்து மீட்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் பொறுப்பு வாய்ந்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பாணந்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் போன்ற போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் இணைந்த நிகழ்வுகள் துயர்மிக்கவை.
இந்தநிலையில் அச்சம் மிகுந்த போதைப்பொருட்களுடன் தொடர்பான பல குற்றச்செயல்கள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமையை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற இடமளிக்க முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி போதைப்பொருள் அற்ற நாட்டினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.