ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – மஜிஸ்ட்ரேட் நீதவான்

7625 0

நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடர்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பமானது.

இதன் போது பிரதான சாட்சியான 3 ஆம் இலக்க சாட்சியாளர், ஹோமாகம முன்னாள் மாவட்ட, நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானும் தற்போதைய கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய ரங்க திஸாநாயக்க சாட்சியத்தை வழங்கினார்.

தொலைபேசி மணி அடித்ததாலும், கொட்டாவி விட்ட தற்காகவும் நீதிமன்றை அவமதித்ததாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித்துறையில் உள்ளன.

இந் நிலையில் நீதிமன்ற விசாரணையின் இடை நடுவே, நீதவானுக்கு நேராக தனது விரல்களை நீட்டி சந்தேக நபர்களான இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிவானுக்கே கட்டளை இட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி நீதிமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்க சாட்சியளித்துள்ளார்.

இத்தகைய சம்பவம் ஒன்றுக்கு நான் எனது 12 வருட கால நீதிவான் சேவையில் முகம் கொடுத்ததே இல்லை. அதனால் அந்த சம்பவமும், நாளும் என்னால் மறக்க முடியாதது’ என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணைகளை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, வழக்கில் முன்னாள் ஹோமாகம நீதிவானும் தற்போதைய கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய ரங்க திஸாநயக்க, முன்னாள் அரசின் சிரேஷ்ட சட்டவாதியும் தற்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரலுமாகிய திலீப பீரிஸ் உள்ளிட்ட எட்டு சாட்சியங்களை ஞானசார தேரருக்கு எதிராக மன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கூறி அப்பட்டியலை நீதியரசர்களுக்கு வழங்கினார்.

இதன் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார். குறித்த வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸின் சாட்சியம் பதிவு செய்யப்படவுள்ளது.

Leave a comment