விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடிய தன் மகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக மாணவி வளர்மதியின் தந்தை மாதையன் தெரிவித்துள்ளார்.
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி(வயது 23). பி.எஸ்.சி. பட்டதாரி. இவரும், சேலம் பொன்னம்மாபேட்டை தில்லைநகரை சேர்ந்த ஜெயந்தி(39) என்பவரும் கடந்த 12-ந்தேதி சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு குறித்தும், காவல்துறை குறித்தும் சில வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் இருவரையும் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் ஜெயந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வளர்மதி கோவையில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கைதான வளர்மதி மீது பல்வேறு வழக்குகள் இருந்ததாலும், நக்சலைட் தொடர்பில் உள்ளவர் என விசாரணையில் தெரியவந்ததாலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் வளர்மதியிடம் வழங்கப்பட்டது.
10-ம் வகுப்பு வரை வீராணம் அருகே உள்ள வலசையூரில் அரசு உயர் நிலைப்பள்ளியிலும், 12-ம் வகுப்பு வரை சேலம் சூரமங்கலம் அருகே செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலும் படித்த வளர்மதி பின்னர் பட்டப்படிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். இங்கு பி.எஸ்.சி.(விவசாயம்) பட்டம் பெற்ற அவர் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இதழியல் முதலாம் ஆண்டு பட்டமேற்படிப்பு படிக்கிறார்.
இந்த நிலையில் தான் வளர்மதி கல்லூரி மாணவிகளிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கிய போது கைது செய்யப்பட்டார். இது குறித்து அவரது தந்தை மாதையன் கூறியதாவது:-
என்னுடைய மகள் படிப்பில் படுசுட்டி. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வந்தவர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று அப்போதைய வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் பரிசு பெற்றார். பின்னர் காவல் துறை குறித்து சென்னையில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பங்கேற்று பரிசு வென்றார். அவருக்கு அப்போதைய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் பரிசு வழங்கி பாராட்டினார். துணிச்சலாக பேசக்கூடிய தைரியம் கொண்டவர் வளர்மதி.
சிதம்பரத்தில் அவர் படித்தபோது கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதில் மாணவர்களில் ஒருவராக போராடி கைதானார். கல்லூரியில் விவசாயம் படித்தது முதல் இயற்கை விவசாயத்தை பற்றியும், விவசாயிகளின் சிரமங்கள் குறித்தும் அதிகமாக பேசுவார்.
கல்லூரி படிப்பை முடித்து விட்டு வந்த பின்னர் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்களும் போராடுவதை கண்டு வேதனையுடன் பேசி வந்தார். நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக தானும் போராட போவதாக கூறினார். கோவையில் இருந்து நெடுவாசலுக்கு ரெயிலில் சென்றபோது, போராட்டம் தொடர்பாக துண்டு பிரசுரம் விநியோகித்தார். அப்போது குளித்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி ஜெயிலில் ஒரு மாதம் வரை இருந்த அவர் கடந்த மே மாதம் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் போலீசார் எனது மகளை தேடி வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம் ‘‘விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது தவிர வேறு என்ன குற்றம் செய்தேன்? என்று வளர்மதி தைரியமாக கேட்டார். ஆனால் போலீசார் கூறுவது போல நக்சலைட் போன்றவர்களுடன் என் மகளுக்கு தொடர்பு கிடையாது’’.
இதே ஊரை சேர்ந்த பழனிவேலு (நக்சலைட்) எங்களுக்கு தூரத்து உறவுமுறை. இதனால் நக்சலைட்டுகளுடன் தொடர்பு என்று போலீசார் கூறுகின்றனர். அரசுக்கு எதிராக எனது மகள் போராடவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் போராடினார். வளர்மதிக்கு திருமணம் செய்து வைக்க நாங்கள் ஏற்பாடு செய்து வந்தோம். ஆனால் கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் குறித்து முடிவு செய்து கொள்வதாக கூறினார். ‘‘மாணவி என்றும் பாராமல் என் மகளை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது’’. இவ்வாறு அவர் கூறினார்.