சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு

478 0

பெங்களூரு சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தது மத்திய அரசுக்கு ஏப்ரல் மாதமே தெரியும் என புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முறைகேடாக சொத்து குவித்து 4 ஆண்டு தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.

சசிகலா தரப்பில் சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டதாகவும் டி.ஐ.ஜி. ரூபா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பணப் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசுக்கு தெரிந்து விட்டது.

அதன் பிறகுதான் சசிகலா தரப்பில் இருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சம் லட்சமாக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த ஏற்பாடுகள் நடந்தன. அதன்படிதான் தற்போது இந்த விவகாரத்தில் சசிகலா சிக்கியுள்ளார்.

சசிகலா சிக்குவதற்கு கர்நாடக மாநில முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம்தான் காரணமாக அமைந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இடைத்தரகர்கள் மூலம் அந்த லஞ்சத்தை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டி.டி.வி. தினகரனின் நண்பர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவரையும் டெல்லி போலீசார் விசாரித்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாசுடன் அவர் பல தடவை பேசி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் பிரகாஷ் மீது சந்தேகப்பட்டனர். பிரகாஷ் மூலம்தான் ஹவாலா அடிப்படையில் ரூ.10 கோடி டெல்லிக்கு வந்திருக்கும் என்று நினைத்தனர். அதை உறுதிப்படுத்த பிரகாசை போலீசார் டெல்லிக்கு அழைத்து விசாரித்தனர்.

அப்போது பிரகாஷ் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உறுதிப்பட தெரிவித்தார். டெல்லி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்த போது அவர், தினகரனை தெரியும். ஆனால் அவரிடம் பெற்று ஹவாலா அடிப்படையில் டெல்லிக்கு எந்த பணத்தையும் அனுப்பவில்லை என்று கூறினார்.

அதே சமயத்தில் தினகரன் மூலம் பெங்களூர் சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக உளறி கொட்டினார். சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்கு ரூ.2 கோடி தினகரன் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதை கேட்டதும் டெல்லி போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் கொடுத்த இந்த வாக்குமூலத்தை டெல்லி போலீசார் 306-வது சட்டப்பிரிவின் கீழ் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.

பெங்களூர் சிறையில் விதிகளை மீறி சலுகைகளை பெற ரூ.2 கோடி கைமாறியது பற்றி டெல்லி போலீசார் மத்திய உள்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்தே சசிகலா தரப்பினரை பொறி வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதமாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிக்கப்பட்டு வந்தது.

அப்போது சசிகலா தனக்கு தேவையான எல்லா வசதிகளையும் சிறைக்குள் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் ஒவ்வொரு சலுகையும் பெற ஒவ்வொரு தடவையும் பணம் கொடுக்கப்படுவதும் தெரிய வந்தது. சிறை துறையில் பல்வேறு உயர் அதிகாரிகள் சசிகலா தரப்பிடம் இருந்து பணம் பெறுவதும் கண்டு பிடிக்கப்பட்டது.அந்த வகையில் ரூ.2 கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு சந்தேகித்தது. இதைத் தொடர்ந்தே அதிரடி நடவடிக்கைகள் மூலம் சசிகலா பெற்று வரும் சலுகைகள் அம்பலப்படுத்தப்பட்டது.

இந்த வி‌ஷயத்தில் சசிகலாவை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் ஆதாரமாக மாறி உள்ளன. அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்வதற்கு கைதிகளே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.அந்த கைதிகள்தான் தற்போது அதிரடியாக வேறு வேறு ஜெயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு தெரியாமலேயே இவை நடந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் டி.ஐ.ஜி. ரூபாவின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் சிறை துறைக்கு வருவதற்கு முன்பு வேறொரு துறையில் இருந்தார்.பெங்களூரில் அவரது வீட்டுக்கு அருகே மத்திய மந்திரி ஒருவர் வசித்து வருகிறார். அவரும் ரூபாவும் ஒருநாள் காலையில் நடை பயிற்சிக்கு சென்றபோது பேசிக்கொண்டே சென்றுள்ளனர்.

அப்போதுதான் சசிகலா பற்றிய தகவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. சிறையில் சசிகலா விதிகளை மீறி சலுகைகளை அனுபவிப்பதை அவர்கள் விவாதித்தனர்.இதையடுத்து டி.ஐ.ஜி. ரூபா சிறைத்துறைக்கு மாற்றப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Leave a comment