வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆலய பிரதம குருக்களிடம் கொடிச்சீலை கையளிக்கப்பட்டுள்ளது.
கொடிச்சீலையானது தலைமுறை தலைமுறையாக செங்குந்தர்மரபில் வந்த திரு.சிவஞானமுதலியார் பேரினால் திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியில் அமைந்துள்ள வைத்தியரின் இல்லத்தில் இருந்து மங்களவாத்தியங்கள் சகிதம் எடுத்து வரப்பட்டு,
சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வைரவநாதர் வல்லிபுரசாமியினால் அமைக்கப்பட்டுள்ள கொடித்தேர் மடத்தில் கோவில் கொண்டருளியிருக்கும் முருகப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று, கொடிச்சீலை அடியார்கள் புடை சூழ அழகிய சிறிய சித்திரத்தேரில் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.